விண்வெளித்துறை
இந்தியாவின் முதலாவது தனியார் செலுத்துவாகனம் மூலம் 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன
தனியார் விண்வெளி நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
18 NOV 2022 3:52PM by PIB Chennai
விண்வெளித்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 புத்தொழில்கள் (ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்) தொடங்கப்பட்டுள்ளன என்றும் தனியார் விண்வெளி நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதலாவது தனியார் செலுத்து வாகனம் விக்ரம்-எஸ் மூலம் மூன்று செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின், விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய அவர், இந்த ப்ராரம்ப் (ஆரம்பம்) இயக்கம் இந்திய விண்வெளி திட்டத்தில் இது புதிய தொடக்கம், புதிய விடியல், என்று வர்ணித்தார்.
ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வி மற்றும் தொழில்துறையின் ஒருங்கிணைப்பு காரணமாக விண்வெளித்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
விண்வெளித்துறையில் அரசு - தனியார் பங்களிப்புக்கு வழிவகுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாபெரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கென்று தனியான சூழ்நிலையை உருவாக்குவதில் இது மிகப்பெரிய நடவடிக்கை என்றும் அவர் கூறினார். இந்தியாவின் புத்தொழில் (ஸ்டார்ட் அப் நிறுவன) இயக்கத்தில் இது ஒரு திருப்புமுனை என்றும் அமைச்சர் தெரிவித்தார். இஸ்ரோவின் பெருமிதம் கொள்ளத்தக்க சாதனைகளில் மேலும் ஒன்றாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளதாகவும், இது இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். குறைந்த செலவில் செயற்கைக்கோள் செலுத்துவதில் வரலாற்று சிறப்புமிக்க இன்றைய நிகழ்வு சமவாய்ப்பை அளிக்க உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய விண்வெளித்துறை அண்மைக்காலத்தில் தொலைதூர மருத்துவம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கியமான துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார். இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை ஏற்கனவே ஏறுமுகத்தில் இருப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
முன்னதாக இந்தியாவின் முதலாவது தனியார் துறை செலுத்துவாகனம் மூலம் மூன்று செயற்கைக்கோள்கள் இன்று (18.11.2022) காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள செலுத்து தளத்தில் இருந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. ப்ராரம்ப் (தொடக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ்டெக் இந்தியா, பஸூசும் அர்மீனியா ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. 80 கிலோகிராம் எடை கொண்ட இவை தனியார் நிறுவனத்தின் கலாம் 80 உந்துவிசையை பயன்படுத்தி 545 கிலோகிராம் எடைகொண்ட செலுத்துவாகனம் மூலம் செலுத்தப்பட்டன.
நாட்டின் தனியார் புத்தொழில் நிறுவனங்களுக்கு இஸ்ரோவின் ஆதார வளங்களை பயன்படுத்துவதற்கான புதிய ஒழுங்குமுறை ஆணையமான இன்-ஸ்பேஸ் மூலம் இந்த செயற்கைக்கோள் செலுத்துவதன் நடைமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஐதராபாதை தலைமையிடமாக கொண்டது. இந்த நிறுவனம் இன்று தனது செலுத்துவாகனம் மூலம் மூன்று செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
***************
SG/MSV/SMB/AG/KRS
(Release ID: 1877026)
Visitor Counter : 323