குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

போபாலில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 16 NOV 2022 1:45PM by PIB Chennai

போபாலில் இன்று நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவை தன்னிறைவு கொண்ட வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் மகளிர் பங்கேற்பு அவசியமாகும் என்றார். மகளிர் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பங்கேற்பதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் தங்களது முழு ஆற்றலை பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

பெண்கள் ஒருவொருக்கொருவர் ஊக்குவித்து, உதவி செய்து, மற்றவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும், வளர்ச்சிப் பாதையில் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம் என்று கூறிய குடியரசுத் தலைவர், வளர்ச்சியின் பல்வேறு திசைகளில் அவர்களை முன்னேற்ற இது உதவுகிறது என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மூலம் சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதபாக அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார தன்னிறைவு என்பது மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான  ஒரு சிறந்த வழி என்று கூறிய குடியரசுத் தலைவர், பொருளாதாரமும், சமுதாய தன்னிறைவும் ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றுக்கொன்று உதவக் கூடியவை என்றார்.  மத்தியப் பிரதேசத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமன மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் அதிக அளவிலான பங்களிப்பு பொருளாதாரம், சமுதாயம் மற்றும் நாட்டை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஒரு பெரும் இயக்கமாக மாற்றிய எண்ணம் பாராட்டத் தக்கது என்று அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான சுயஉதவிக் குழுக்கள் பெண்களால் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், அவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு (ட்ரைஃபெட்) மூலம் நுகர்வோரை சென்றடைவது குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

ஊரகப் பகுதிகளில் மகளிர் எழுத்தறிவு விகிதம் அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று கூறிய குடியரசுத் தலைவர், நமது சகோதரிகளும், புதல்விகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைத்து பொருளாதார தன்னிறைவு அடைந்து வருவதாக குறிப்பிட்டார். இதன் பயனாக ஊரக குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைவதாக அவர் கூறினார்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். பெண்களின் பங்களிப்புடன் இந்தியா வெகுவிரைவில் வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

போபாலில் உள்ள மத்தியப் பிரதேச பழங்குடியினர் அருங்காட்சியகத்தை இன்று காலை குடியரசுத் தலைவர் பார்வையிட்டார். பழங்குடியினரின் கலாச்சாரம், பாரம்பரியம், பழக்க, வழக்கங்கள், ஓவியங்கள், பழங்குடியினர் பிராந்தியங்களின் கலைப்பொருட்கள் ஆகியவற்றை அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது.

                           **************

MSV/PKV/KG/KRS

(Release ID: 1876386)


(Release ID: 1876502) Visitor Counter : 145