தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ளது
Posted On:
14 NOV 2022 6:29PM by PIB Chennai
53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திரைப்பட விழா மிகப்பெரும் திரைப்பட ஜாம்பவான்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து கலை, திரைப்படங்கள் மற்றும் பாரம்பரியத்தின் கூட்டுக்கலவையாக பிரதிபலிக்கிறது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில். 183 படங்கள் திரையிடப்படவுள்ள நிலையில், இந்திய திரைப்பட பிரிவில், 25 கதையுடன் கூடிய படங்களும், 20 கதை அல்லாத திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன.
- சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்பானிஷ் திரைப்பட இயக்குனர் கார்லோஸ் சவ்ராவுக்கு வழங்கப்படுகிறது
- பிரான்ஸ் சிறப்பு கவனம் செலுத்தப்படும் நாடாக கருதப்பட்டு அந்நாட்டின் 8 திரைப்படங்கள் திரையிடப்படும்
- டியட்டர் பெர்னர் இயக்கிய ஆஸ்திரிய திரைப்படமான அல்மா அண்ட் ஆஸ்கர், வருடாந்திர திரைப்பட விழாவின் முதல் படமாக திரையிடப்படுகிறது. கிர்ஸிஸ்டோப் ஸானுசியின் ‘பெர்பெக்ட் நம்பர்’ கடைசி திரைப்படமாக காண்பிக்கப்படும்.
- இந்த ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு புதிய முன்முயற்சிகள் மற்றும் திரைப்பட சந்தையை கொண்டுள்ளது.
- கோவா முழுவதும் கேரவன் வண்டிகள் மூலம் திரைப்படங்கள் திரையிடப்படும்
- கடற்கரை திறந்தவெளியிலும் படங்கள் திரையிடப்படும்
- “டிஜிட்டல் முறையில் மீட்டுறுவாக்கம் செய்யப்பட்ட இந்திய படங்கள்” பிரிவில், இந்திய தேசிய திரைப்பட களஞ்சியத்தில் இருந்து படங்கள் காண்பிக்கப்படும்
- இந்த ஆண்டின் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஆஷாபரேக்கின் மலரும் நினைவாக - தீஸ்ரி மன்ஸில், தோ பதான், கட்டி பதங் ஆகிய 3 படங்கள் திரையிடப்படும்
- அஞ்சலி பிரிவில் 15 இந்தியப் படங்களும், 5 சர்வதேசப் படங்களும் இடம்பெறும்
- மணிப்புரி சினிமாவின் பொன்விழாவை குறிக்கும் வகையில், வடகிழக்கு இந்தியாவின் திரைப்படங்களை பிரபலப்படுத்த 5 கதையுடன் கூடிய படங்கள், 5 கதை இல்லாத படங்கள் திரையிடப்படும்
- நவம்பர் 26-ந் தேதி ஷிக்மோத்சவ் (வசந்த விழா), 27-ந் தேதி, 2022 அன்று கோவா திருவிழா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
- விடுதலையின் அமிர்தப் பெருவிழா கருப்பொருள் குறித்த கண்காட்சிக்கு மத்திய மக்கள் தொடர்பகம் (சிபிசி) ஏற்பாடு செய்யும்
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், புதுதில்லி தேசிய ஊடக மையத்தின் திரைப்பட விழா குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஸ்பானிஷ் திரைப்பட இயக்குனர் கார்லோஸ் சவ்ராவுக்கு, சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார் என்று கூறினார். பின்னோக்கி பார்க்கும் விதமாக இவரது எட்டு படங்கள் இவ்வாண்டு விழாவில் திரையிடப்படும். கார்லோஸ் சவ்ரா, பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் அவரது டெப்ரிசா டெப்ரிசா திரைப்படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தங்க கரடி விருதை பெற்றார். அத்துடன் பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைகள் அகாடமியின் இரண்டு தங்க கரடி விருதுகளை லா காசா, பெப்பர்மின்ட் பிராப்ரே படங்களுக்கு பெற்றார். கேன்ஸ் பட விழாவில் 3 விருதுகளையும், மேலும் பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்த ஆண்டு தாதா சாகேப் விருது பெற்ற ஆஷாபரேக் பங்கேற்ற தீஸ்ரி மன்ஸில், தோ பதான், கட்டி பதங் ஆகிய 3 பழைய படங்கள் திரையிடப்படும் என அவர் தெரிவித்தார். வடகிழக்கு இந்தியாவின் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் ஒரு முன் முயற்சியாக மணிப்புரி சினிமாவின் பொன்விழாவை குறிக்கும் வகையில், கதையுடன் கூடிய ஐந்து படங்களும், கதை இல்லாத ஐந்து படங்களும் திரையிடப்படும்.
டியட்டர் பெர்னர் இயக்கிய அல்மா அண்ட் ஆஸ்கர் என்னும் ஆஸ்திரிய திரைப்படம் வருடாந்திர திரைப்பட விழாவின் முதல் படமாகவும், கிர்ஸிஸ்டோப் ஸானுசியின் பெர்பெக்ட் நம்பர் காட்சி படமாகவும் திரையிடப்படும். பிரான்ஸ் நாட்டு படங்களில் கவனம் செலுத்தும் வகையில் அந்நாட்டின் 8 படங்கள் திரையிடப்படும். அஞ்சலி பிரிவில் 15 இந்தியப் படங்களும், 5 சர்வதேசப் படங்களும் இடம்பெறும். பாரத ரத்னா லதா மங்கேஷ்கர், இசையமைப்பாளர், பாடகர் பப்பி லஹரி, கதக் மேதை பண்டிட் பிர்ஜூ மகராஜ், நடிகர்கள் ரமேஷ் தியோ, மகேஷ்வரி அம்மா, பாடகர் கே கே, இயக்குனர் தருண், அஸ்சாமிய நடிகர் நிப்பன் தாஸ், நாடக கலைஞர் மஜூம்தார், பாடகர் பூபிந்தர் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்படும். சர்வதேச பிரிவில் பாப் ரபேல்சன், இவான் ரிட்மேன், பீட்டர் பொக்தானோ விச், டக்ளஸ் டிரம்பெல், மோனிகா விட்டி ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்படும்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன்முயற்சியுடன் ‘நாளைய 75 படைப்பாக்க மனங்கள்’ என்பதன் 2-வது கட்டம் மற்றொரு ஈர்ப்பான நிகழ்வாகும். இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளின் அடையாளமாக இந்த எண்ணிக்கையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். வரும் ஆண்டுகளில் இளம் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையில் கூடுதலாக ஒன்றினை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களிலிருந்து சில திரைப்படங்கள் ‘திரைப்படச் சந்தையில்’ திரையிடப்படும். முதன் முறையாக கேன்ஸ் நகருக்கு அணிவகுப்பு போன்ற மிகப் பெரிய சர்வதேச சந்தைகளுக்காக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அரங்குகள் இடம் பெற்றிருக்கும். இந்த ஆண்டு மொத்தம் 42 அரங்குகள் அமைந்திருக்கும். இவற்றில் பல்வேறு மாநில அரசுகளின் திரைத்துறை அலுவலகங்கள், பங்கு பெறும் நாடுகளின் அலுவலகங்கள், திரைப்படத் தொழில்துறையில் செயல்படுவோருக்கான அலுவலகங்கள் அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு அலுவலகங்கள் செயல்படும். ‘திரையிடும் அறை’ என்ற புதிய முயற்சியும் முதன் முறையாக இந்த விழாவில் அமைய உள்ளது. இதில், மிகச் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுவதோடு இந்தப் படங்களின் உரிமைகளை வாங்கவும், உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் அவற்றை பயன்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
ஆஸ்கர் விருது பெற்ற ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி போன்ற திரைப்படங்கள் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் திரையிடப்படும். இத்திரைப்படங்களில் ஒலி – காட்சியுடன் காட்சி விவர வசன வரிகளும் இடம் பெறும், இது மாற்றுத்திறனாளிகளும் கூட திரைப்படங்களை எளிதாக ரசிப்பதற்கு ஏற்ற திரைப்படங்களை உருவாக்க திரை தொழில்துறையின் உணர்வை மேம்படுத்துவதற்கு உதவும்.
அச்சிடப்பட்ட சிறந்த கதைகளைக் கொண்ட நூல்களுக்கும், நூல்களைத் தழுவி உருவாக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக புதிதாக வெற்றிப் படங்களுக்கான நூல்கள் என்ற புத்தக ஏற்பு நிகழ்ச்சியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சில சிறந்த பதிப்பாளர்கள், வருகை தருவார்கள் என்றும் நூல்களின் உரிமைகளை விற்பதன் மூலம், அவை நல்ல திரைக்கதையாக மாற இயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரித்வி கொனானோரின் கன்னட திரைப்படமான ஹடிநெலந்து இந்திய அரங்கில் முதல் திரைப்படமாக திரையிடப்படும். கதையல்லா திரைப்படப்பிரிவை திவ்யா கௌவாஸ்ஜி தொடங்கிவைப்பார். பான் நளினின் செலோ ஷோ சிறப்பு திரைப்படமாக திரையிடப்படும். இது சிறந்த வெளிநாட்டு மொழிப்பிரிவில், ஆஸ்கருக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக அனுப்பப்பட்டது. மேலும், மதூர் பண்டார்க்கரின் இந்தியா லாக் டவுன் திரைப்படமும் திரையிடப்படும்.
‘டிஜிட்டல் முறையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட இந்திய படங்கள்’ பிரிவில், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இந்திய தேசிய திரைப்பட ஆவண காப்பகங்களிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படும். 1957 ஆடை அலங்கார பொருளிலான ஷோரப் மோடியின் திரைப்படம் நௌவ்ஷெர்வான்-இ-அடில், 1969-ல் தேசிய விருது பெற்ற பஞ்சாபி, திரைப்படமான ரமேஷ் மகேஷ்வரியின் நானக் நாம் ஜகஸ் ஹே, 1980-ன் தெலுங்கு இசை திரைப்படமான கே விஸ்வநாத்தின் சங்கராபரணம், சத்யஜித்ரேயின் அரிய திரைப்படங்களான 1977 காலத்தின் ஷத்ரஞ் கே கிலாடி, 1989-ன் சமூக திரைப்படமான கணசத்ரு உள்ளிட்டவை இந்தப் பிரிவில் திரையிடப்படும்.
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவை காணொலி வாயிலாகவும் காணலாம். வகுப்புகள், கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் மற்றும் கோவாவிற்கு செல்லாமலேயே துவக்க மற்றும் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பதிவு செய்த பயனாளிகள் பெறுவார்கள். இத்தகைய நேரலை அமர்வுகளின் அட்டவணையை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகம் மற்றும் கேளிக்கை தொழில்நுட்பக் கண்காட்சியில் சினிஓம், கானன், ஜெயிஸ், பல்ஸ், பிரசாத் கார்ப்பரேஷன், சோனி, டெக்னிகலர் கிரியேட்டிவ் சொல்யூஷன்ஸ், அமேசான், ஹன்சா சினி எக்யூப்மென்ட், எஸ்.ஆர்.எஸ்.ஜி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது உபகரணங்களையும், சேவைகளையும் காட்சிப்படுத்தும். ஊடகம் மற்றும் கேளிக்கை தொழில்நுட்ப கண்காட்சி பகுதியில் விடுதலையின் அமிர்த பெருவிழா நிகழ்வுகள் என்ற கருப்பொருளில் விடுதலையின் அமிர்த பெருவிழா கண்காட்சியை மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும். நவம்பர் 26, அன்று வசந்த கால திருவிழா, நவம்பர் 27 அன்று கோவா திருவிழா உட்பட 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் ஏராளமான கண்கவர் அம்சங்கள் உள்ளன.
திருவிழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களும் பொதுமக்களும் யோகா மற்றும் முழுமையான உடல் பரிசோதனைகளைப் பெற்று மகிழ்வதற்காக, அதிகாரப்பூர்வ உடல் நல கூட்டாளியான ஆயுஷ் அமைச்சகம், ஓர் அமர்வை நடத்தும். ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகிய ஆயுஷின் நான்கு துறைகளை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துவக்க மற்றும் நிறைவு விழாவில் இந்தியா முழுவதிலும் உள்ள தலைசிறந்த திரைப்பட பிரமுகர்கள் கலந்து கொள்ளும் சுமார் 14 கலை நிகழ்ச்சிகளோடு, ஃபிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கோவாவைச் சேர்ந்த இசை மற்றும் நடன குழுவினரின் நிகழ்ச்சிகளும் இடம்பெறும். விடுதலையின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் கீழ், கடந்த 100 ஆண்டுகளில் இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சி என்பது துவக்க விழாவின் கருப்பொருளாகும்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர், “சர்வதேச திரைப்படப் பிரிவில் திரையிடுவதற்காக 180 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு மரியாதை என்ற பிரிவில் 5 ஆளுமைகளின் திரைப்படங்கள் திரையிடப்படுவதோடு, திரைப்படத் திருவிழாவின் அஞ்சலி என்ற பிரிவில் இரண்டு புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்கள் திரையிடப்படும்”, என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா, “பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் திரைப்பட நிறுவனங்களின் அரங்குகள் கோவாவின் பஞ்ஜிம் கடற்கரையின் மிக அழகான நடைபாதையில் அமைக்கப்பட்டிருப்பதால், திரைப்பட அரங்கு பிரிவு குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியமைக்கப்படும். இந்த அரங்குகளுக்கு திரைப்படத் திருவிழாவின் பிரமுகர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். பொதுமக்கள் பணி நாட்களில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை சென்று பார்க்கலாம்”, என்று தெரிவித்தார்.
திரைப்படங்களை ஊக்குவித்து ஆதரிக்கும் வகையில் பல்வேறு இந்தித் திரைப்படங்கள் அவற்றின் நடிகர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பரேஷ் ராவலின் ஸ்டோரி டெல்லர், அஜய் தேவ்கன் மற்றும் தபுவின் திரிஷ்யம்-2 , வருண் தவான் மற்றும் கிரித்தி சனோனின் பேதியா மற்றும் யாமி கவுதமின் லாஸ்ட் ஆகிய திரைப்படங்கள் இதில் அடங்கும். விரைவில் தெலுங்கில் வரவுள்ள திரைப்படமான ரைமோ, தீப்தி நவலில் மற்றும் கல்கி கோச்சலினின் கோல்டு பிஷ், ரன்தீப் ஹூடா மற்றும் இலியானா டீக்ருசின் தேரா க்கியா ஹோகா லவ்லி ஆகிய திரைப்படங்களும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. ஒடிடி தளங்களில் வந்த வதந்தி, காக்கி, ஃபவுடா சீசன் -4 ஆகியவற்றின் பகுதிகளும் இவற்றுடன் திரையிடப்படுகின்றன.
பெருமளவில் வரவேற்பு பெறும் கேன்ஸ், பெர்லின், டொரொண்டொ, வெனீஸ் ஆகிய உலகின் கவுரவக்க திரைப்பட விழாக்களில் விருதுபெற்ற திரைப்படங்களும் இந்த விழாவில் இடம்பெறும். இவற்றில் சில திரைப்படங்கள் ஆஸ்கார் விருது வென்ற இயக்குநர்களால் இயக்கப்பட்டவை ஆகும். பார்க்-சான் வூக்-கின் டெசிஷன் டு லீவ், ரூபன் ஓஸ்ட்லண்டின் ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னஸ், டேரன் ஓரோனோஃப்ஸ்கி மற்றும் கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோவின் தி வேல், கிளாரி டெனிஸின் போத் சைட்ஸ் ஆஃப் தி பிளேட், கை டாவிடியின் இன்னொசென்ஸ், அலைஸ் டியோப்பின் செயிண்ட் ஓமர் மற்றும் மரியம் டவுசானியின் தி ப்ளூ காஃப்டன் ஆகியவை இந்த படங்களில் அடங்கும்.
23 சிறப்பு வகுப்புகள் மற்றும் உள் கலந்துரையாடல் அமர்வுகள் சிறந்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் நடைபெற உள்ளன. இது சிறந்த அனுபவத்திற்கு உறுதியளிப்பதாக அமையும். வி. விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுவதிலும், ஏ ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு குறித்தும், அனுபம் கர் நடிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை நடத்த உள்ளனர். அகாடமி கலர் என்கோடிங் சிஸ்டம் (ஏசிஇஎஸ்) என்ற திரைப்பட தயாரிப்புக்கான வண்ண தர நிலை குறித்த சிறப்பு வகுப்புகள் ஆஸ்கார் அகாடமி வல்லுனர்களால் நடத்தப்பட உள்ளன. அனிமேஷன் தொடர்பான வகுப்புகளை மார்க் ஓஸ்போனும், கிறிஸ்டியன் ஜெஸ்டிக்கும் நடத்த உள்ளனர். கலந்துரையாடல் அமர்வுகளில் ஆஷாபரேக், பர்சூன் ஜோஷி, ஆனந்த் எல் ராய், ஆர் பால்கி, நவாசுதீன் சித்திக் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் அறிமுக நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் உடன் இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் முக்கிய அம்சங்களை செய்தியாளர்களுக்கு எடுத்துரைக்கும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது
*****
MSV/PKV/SMB/RB/PLM/IDS
(Release ID: 1875915)
Visitor Counter : 377