குடியரசுத் தலைவர் செயலகம்
புவனேஸ்வரில், கல்வி தொடர்பான பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்
Posted On:
11 NOV 2022 2:07PM by PIB Chennai
புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனிலிருந்து மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (11.11.2022) தொடங்கிவைத்தார்.
ஒடியா மொழியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் பொறியியல் நூல்கள், அறிவியல் தொழில்நுட்பத்திற்கான சொற்பிறப்பியல் ஆணையத்தால் ஒடியா மொழியில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப சொற்களின் கலைக்களஞ்சியம் மற்றும் இ-கும்ப் (பல வகையான பாரத மொழிகளில் திரட்டப்பட்ட அறிவு) போன்றவை இவற்றில் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த முக்கியமான திட்டங்களைத் தொடங்கி வைத்ததற்கு தாம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். அனைவருக்கும் எளிதாக கல்வி கிடைக்கும் திசையிலான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றும் அவர் கூறினார். தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள ஏராளமான மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்று குடியரசுத்தலைவர் கூறினார். தாய்மொழியில் கற்றல் என்பது மாணவர்களிடையே ஆக்கப்பூர்வ சிந்தனையை உருவாக்கும் என்றும் பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இது நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார். மாநில மொழிகளில் பாடநூல்கள் கிடைக்காததன் காரணமாக முந்தைய காலத்தில் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் பயிற்றுவிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த சிரமத்தை நீக்குவதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் முயற்சிகளை அவர் பாராட்டினார். மாநிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் கற்றலை அறிமுகம் செய்வது தொலைநோக்கில் நன்கு கல்வி கற்ற, விழிப்புணர்வு மிக்க, துடிப்பான சமூகத்தை நோக்கிய செயலாகும் என்று திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
**************
SM/SMB/KPG/IDS
(Release ID: 1875305)
Visitor Counter : 184