சுற்றுலா அமைச்சகம்

நவம்பர் 07 முதல் 09 வரை லண்டனில் நடைபெறும் உலகப் பயணச்சந்தை பொருட்காட்சி 2022-இல் மத்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்கிறது

Posted On: 05 NOV 2022 3:57PM by PIB Chennai

லண்டனில் நவம்பர் 07 முதல் 09 வரை நடைபெறும் உலகப் பயணச் சந்தை பொருட்காட்சி 2022-இல் மத்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்கிறது.  இது மிகப்பெரிய சர்வதேச பயணக் கண்காட்சிகளில் ஒன்றாகும்.

இந்த ஆண்டு கண்காட்சியின் கருப்பொருள் ‘பயணத்தின் எதிர்காலம் இப்போது தொடங்குகிறது’ என்பதாகும். கிட்டத்தட்ட 2 வருட இடைவெளிக்குப் பிறகு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நம்நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இந்தியாவின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்திற்குப் பிறகு, நம்நாடு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு தயாராக உள்ளது.

இந்தப்பொருட்காட்சியில் பங்கேற்பதன் மூலம், சுற்றுலா செல்ல விருப்பமான இடமாக இந்தியா இருப்பதை சுட்டிக்காட்டப்படும்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயணம் மற்றும் சுற்றுலாவின் பங்களிப்பு மொத்தப் பொருளாதாரத்தில் 5.19 சதவீதமாகும். 2019 ஆம் ஆண்டில், இந்திய சுற்றுலாத் துறை 79.86 மில்லியன் வேலை வாய்ப்புகளை (நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு) பெற்றுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் சுற்றுலாத் துறையானது கொவிட்-19 தொற்றுநோய் தாக்குதலுக்கு முந்தைய நிலைக்கு படிப்படியாக மீண்டு வர உதவியுள்ளது.

மாநில அரசுகள், பிற மத்திய அமைச்சகங்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), டூர் ஆபரேட்டர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், டிராவல் ஏஜெண்டுகள், ஆன்லைன் டிராவல் ஏஜெண்டுகள், மருத்துவ சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் என மொத்தம் 16 துறை சார்ந்தவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

மருத்துவ சுற்றுலா, சொகுசு ரயில்கள் மற்றும் சுற்றுலாத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை சர்வதேச வணிக சமூகத்திற்கு காட்சிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த ஆண்டு, இந்தியக் குழுவில், மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் திரு அரவிந்த் சிங் தலைமையில், திரு ராகேஷ் வர்மா, கூடுதல் செயலாளர் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், இந்திய பயண மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை அறிந்த மத்திய அரசு, இந்தியாவை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்த பொருட்காட்சியில் மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் திரு அரவிந்த் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினர், நம் நாட்டின் பல்வேறு சுற்றுலா சலுகைகளை விளக்கி,  எதிர்காலத்தில் சுற்றுலாத் துறையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சிக்கு தயாராக உள்ளது என்பதை விளக்கி கூறுவர். மேலும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா வழங்கும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தவும் இந்த பொருட்காட்சி நல்ல வாய்ப்பாகும். 

டிசம்பர் 01, 2022-யில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு தலைமையேற்க இந்தியாவும் தயாராகி வருகிறது. அதன் தலைமையின் கீழ், நாட்டில் உள்ள 55 நகரங்களில் 200 க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவின் சுற்றுலாத் துறை சார்ந்த சலுகைகளை முன்னிலைப்படுத்தவும், இந்தியாவின் சுற்றுலா வெற்றிக் கதைகளை உலக அரங்கில் பகிர்ந்து கொள்ளவும் ஒரு இணையற்ற வாய்ப்பை வழங்கும்.

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம், குறிப்பாக கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதையும், 2030-யில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

**************



(Release ID: 1873956) Visitor Counter : 243