வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் (2022-23) இரண்டாவது காலாண்டு வரை 25 சதவீதம் அதிகரித்து 13771 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது

Posted On: 02 NOV 2022 2:45PM by PIB Chennai

நடப்பு நிதியாண்டின் 2022-23 இரண்டாவது காலாண்டு வரை (ஏப்ரல் - செப்டம்பர்) வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தை ஒப்பிடுகையில், 25 சதவீதம் அதிகரித்துள்ளது. வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் (DGCI&S) தற்காலிகத் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) ஒட்டுமொத்த ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் 11056 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2022 ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் இது 13771 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி 42.42 சதவிகிதம் அதிகரித்து (ஏப்ரல்-செப்டம்பர் 2022) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 29.36 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பருப்பு ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் 144 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாசுமதி அரிசி ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், கடந்த ஆறு மாதங்களில் 37.36 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இறைச்சி, பால் மற்றும் கோழிப் பண்ணைப் பொருட்களின் ஏற்றுமதி 10.29 சதவீதமும், மற்ற தானியங்களின் ஏற்றுமதி 12.29 சதவீதமும் அதிகரிதுள்ளது.

இதேபோல், பால் பொருட்களின் ஏற்றுமதி மட்டும் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் கோதுமை ஏற்றுமதி 136 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த சாதனை குறித்து, கருத்துத் தெரிவித்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தின் (APEDA) தலைவர் எம் அங்கமுத்து, “தரமான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை உறுதிசெய்ய விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பதப்படுத்தும் உணவுத் தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். வேளாண் ஏற்றுமதி மதிப்புச் சங்கிலியில், முக்கிய தரப்பினருடன் இணைந்து, ஏற்றுமதிக்கான தேவையான சிறந்த சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம், நடப்பு நிதியாண்டிலும் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்த வளர்ச்சியை நிலை நிறுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்." என்றார்.

 

**************

SM/PLM/RS/IDS


(Release ID: 1873168) Visitor Counter : 329