பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் ஜம்புகோதாவில் ரூ.860 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்


“நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் மாற்றத்தை கையில் எடுத்துள்ளனர், அவர்களுக்கு அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்துள்ளது”

“கோத்ரா குரு கோவிந்த் பல்கலைக்கழகம், நர்மதா பிர்ஸா முண்டா பல்கலைக்கழகம் ஆகியவை உயர்கல்விக்கான மிகச் சிறந்த நிறுவனங்களாகும்”

“கொள்கை வகுப்பு மற்றும் வளர்ச்சியில் அதிக பங்கெடுக்கும் உணர்வு முதன் முதலாக பழங்குடியின சமுதாயத்திற்கு வந்துள்ளது”

“பழங்குடியினருக்கான பெருமைமிக்க இடங்கள், நம்பிக்கை மிக்க இடங்களின் மேம்பாடு சுற்றுலாவுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும்”

Posted On: 01 NOV 2022 3:44PM by PIB Chennai

குஜராத் மாநிலம் பஞ்ச் மஹால், ஜம்புகோதாவில் ரூ.860 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  

கூட்டத்தில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர்; குஜராத்தின் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினருக்கு இது உணர்வுமிக்க நாளாகும் என்றார்.  இன்று மங்காருக்கு பயணம் மேற்கொண்டதை குறிப்பிட்ட பிரதமர், விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த பழங்குடியினத்தைச் சேர்ந்த வீரர்களுக்கும்  குரு கோவிந்த்துக்கும் மரியாதை செலுத்தியதை சுட்டிக்காட்டினார்.

இந்தப் பகுதியுடன் தமக்கு நீண்டநாள் தொடர்பு உள்ளது என்று கூறிய பிரதமர், பழங்குடியினரின் தியாகத்திற்கு பெயர் போன ஜம்புகோதாவில் தாம் இருந்ததை நினைவு கூர்ந்தார். ஷாஹித் ஜோரியா பரமேஸ்வர், ரூப்சிங் நாயக், கலாலியா நாயக்,  ரவுஜிடா நாயக்,  பப்பாரியா கல்மா நாயக் போன்ற தியாகிகளுக்கு தலை வணங்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்த பிராந்தியத்தின் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, ஆகியவை தொடர்பான  கோடிக்கணக்கான  ரூபாய் திட்டங்கள் தொடங்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை சுட்டிக் காட்டிய பிரதமர், குரு கோவிந்த் பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாக வளாகம், கேந்திரீய வித்யாலயா போன்றவை பழங்குடியின சிறார்களுக்கு  பெருமளவில் உதவும் என்று கூறினார்.

ஜம்புகோதாவை புண்ணிய பூமியாக குறிப்பிட்ட பிரதமர், விடுதலைப் போராட்ட  வீரர்களின்  பெருமைமிகு வரலாற்றை நினைவு கூர்ந்தார். 1857 ஆம் ஆண்டின் புரட்சிக்கு நாய்க்டா இயக்கம் உத்வேகம் அளித்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஷாஹித் ஜோரியா பரமேஸ்வர்  துவக்கிய இயக்கத்தில்  பின்னர் ரூப்சிங் நாயக் சேர்ந்த பணியாற்றினார். புரட்சியில், முக்கிய பங்காற்றிய தத்யா தோப்-உடன் அவர் சேர்ந்து போராடினார். இந்த வீரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மரத்தை வணங்கும் வாய்ப்பு  தமக்கு கிட்டியதாக கூறிய பிரதமர், 2012ஆம் ஆண்டு ஒரு நூல் வெளியிடப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.

குஜராத்தில் பள்ளிகளுக்கு தியாகிகளின் பெயர்களை வைக்கும் பாரம்பரியம் நீண்ட காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்டதாக கூறிய பிரதமர்,  விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்ட பள்ளிகளை பட்டியலிட்டார். தியாகிகளின் சிலைகள் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் ஆட்சி புரியும் வாய்ப்பு தமக்கு கிடைத்தபோது, இருந்த நிலையை பிரதமர் நினைவு கூர்ந்தார். பழங்குடியினர் பகுதிகளில் கல்வி, சத்துணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலை இருந்ததாகவும் , இந்த நிலையை மாற்ற தாம் அனைவருடனும் இணைந்து பாடுபட்டதாகவும் அவர் கூறினார்.  நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் மாற்றத்தை கையில் எடுத்துள்ளனர், அவர்களுக்கு அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த மாற்றம் ஒரு நாளில் வந்துவிடவில்லை என்றும் லட்சக்கணக்கான பழங்குடியின குடும்பங்களின் இடையறாத பணியால் இது ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். பழங்குடியினர் பகுதிகளில் பத்தாயிரம் புதிய பள்ளிகள், ஏகலைவா பள்ளிகள், ஆசிரமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியையும் பள்ளிகளில், சத்துணவும் வழங்கப்படுவதாக கூறினார்.

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தும், கன்யா சிக்சா ரத முன்முயற்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், பள்ளிகளில், அறிவியல் கல்வி இல்லாமல் இருந்ததும், ஒரு பெரும் சவாலாக விளங்கியதாக குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளில் 11 அறிவியல் கல்லூரிகள், 11 வணிகவியல் கல்லூரிகள், 23 கலைக்கல்லூரிகள் நூற்றுக்கணக்கான விடுதிகள்  ஆகியவை பழங்குடிப் பகுதி மாவட்டங்களில் திறக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

20, 25 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினப் பகுதிகளில் பள்ளிகளுக்கு பெரும் பற்றாக்குறை நிலவியது. இன்று கோத்ராவில் குரு கோவிந்த் பல்கலைக்கழகம், நர்மதாவில் பிர்ஸா முண்டா பல்கலைக்கழகம் ஆகியவை மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களாக திகழ்கின்றன. புதிய வளாகம் திறக்கப்படுவதன் மூலம், குரு கோவிந்த் பல்கலைக்கழகத்தின் வசதிகள், பெருகும். அகமதாபாதில் திறக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு பல்கலைக்கழக வளாகமும், பழங்குடியின இளைஞர்களுக்கு பெருமளவில் உதவும். முதல் முதலாக  நாட்டிலேயே ட்ரோன் பைலட் உரிமம் வழங்கும் நிறுவனமாக இது உள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் வனப்பாதுகாப்பு, கல்யாண் திட்டம். பழங்குடியின மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக  கூறிய பிரதமர், கடந்த 14, 15 ஆண்டுகளில் பழங்குடியின பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  வரும் ஆண்டுகளில் மேலும் ரூ.1 லட்சம் கோடி செலவழிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறித்து குறிப்பிட்ட பிரதமர், குடிநீர் குழாய் இணைப்புகள், நுண்ணீர் பாசனம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை  பிரதமர் சுட்டிக்காட்டினார். பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களின் வருவாயைப் பெருக்கும் வகையில், ஷகி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், குஜராத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ள அதிவேக தொழில்மயமாக்கலின் பயன்கள், பழங்குடியின  இளைஞர்களை சென்றடையவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.   தொழிற்பயிற்சி மையங்கள். ஐடிஐ-க்கள், உழவர் வளர்ச்சி மையங்கள் போன்றவை 18 லட்சம் பழங்குடியின  இளைஞர்களுக்கு பயன் அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

20, 25 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினரிடையே ஒரு வகையான காய்ச்சல் பரவியிருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர்,  பெரிய மருத்துவமனைகளோ, மருத்துவக் கல்லூரிகளோ இல்லாத நிலை இருந்ததை  நினைவு கூர்ந்தார்.  தற்போது இரட்டை எஞ்சின் அரசு கிராம அளவில் நூற்றுக்கணக்கான சிறிய மருத்துவமனைகளையும், 1,400-க்கும் மேற்பட்ட நலவாழ்வு மையங்களையும் பழங்குடியின பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.  கோத்ரா மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டடங்களை கட்டப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைவரது கூட்டு முயற்சியாலும் பழங்குடியின மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் 24 மணி நேரமும் மின்சார விநியோகம் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழில்கள், விரிவடைந்துள்ளதாக  அவர்  தெரிவித்தார். குஜராத்தின் தங்க வழித்தடம் மூலமாக இரட்டை நகரங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்தியாவில்,  பழங்குடியின சமுதாயங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு  மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விளக்கிய பிரதமர், பழங்குடியினர்களுக்கு என தனி அமைச்சகத்தை பிஜேபி அரசுதான் உருவாக்கியது என்று கூறினார். வரலாற்றில் முதல் முறையாக வன் தன் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பதையும், ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த மூங்கில் வளர்ப்பு மற்றும் விற்பனையை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். வன உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையை மாற்றி அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பகவான் பிர்ஸா முண்டாவின்  பிறந்த நாளை பழங்குடியின கவுரவ தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளதையும் அவர்  தெரிவித்தார்.

ஏழைகள், நலிவடைந்தோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக இரட்டை எஞ்சின் அரசு தொடர் முயற்சியை மேற்கொண்டுள்ளதை பிரதமர் எடுத்துரைத்தார். இலவச ரேஷன் திட்டம், இலவச தடுப்பூசிகள் ஏழைகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சை வசதி, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்தான உணவு, சிறு விவசாயிகளுக்கு பிரதமரின் உழவர் பாதுகாப்பு நிதித்திட்டத்தின் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு அவர்கள் உரம், விதைகளை வாங்கவும், மின்சார கட்டணத்தை செலுத்தவும், வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஏழைகளுக்கு உறுதியான வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு, குடிநீர் இணைப்புகள்,  வழங்கப்படுவதன் மூலம் பழங்குடியினர் தலித்துகள் , பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள் பெரும் பயனடைந்துள்ளன என்று திரு மோடி தெரிவித்தார்.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பங்காற்றியிருப்பதை எடுத்துக்காட்டிய பிரதமர், பாவகத் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கொண்டாடத்துடன் கொடியேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். அம்பாஜி மாதா  ஆலயம், தேவ் மோக்ரா ஆலயம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வேலைவாய்ப்பை பெருக்க சுற்றுலா முக்கிய பங்கு வகித்து வருவதை  சுட்டிக்காட்டிய பிரதமர், பஞ்ச் மஹால் போன்ற இடங்கள் சுற்றுலா வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்றார். இந்தப் பகுதியில் பல்வேறு கோவில்கள் மூலம் சுற்றுலா அதிகரித்துள்ளது என்றும் இதன் மூலம் வேலைவாய்ப்புக்கு வழி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பழங்குடியினப் பகுதிகளில் உள்ள பெருமை  மற்றும் பக்திமிக்க இடங்கள் சுற்றுலாவை பெரிதும் ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இரட்டை எஞ்சின் அரசு வளர்ச்சிக்கு தூண்டுகோலாக திகழ்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியின் பயன்கள் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது என்றார். அயராத பணி மற்றும் அர்ப்பணிப்புடன் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நமது நோக்கம் தெளிவாக உள்ளது. அனைவரும் இணைந்து வளர்ச்சி அடைந்த குஜராத்தையும். வளர்ச்சி அடைந்த இந்தியாவையும், கட்டமைப்போம் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார் பிரதமர்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்தர் பாய் படேல், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

**************  

M/PKV/KPG/IDS



(Release ID: 1872763) Visitor Counter : 145