குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

7வது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

Posted On: 01 NOV 2022 2:21PM by PIB Chennai

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் இன்று (நவம்பர் 1, 2022) 7வது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், "நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. இந்திய நாகரிகத்தில் தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பிந்தைய பயணத்திலும் முக்கியமானதாக உள்ளது. அதனால்தான் அனைத்து நீர் ஆதாரங்களும் புனிதமாக கருதப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகையால், நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது. கிராமங்களில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன. பல உள்ளூர் ஆறுகள் அழிந்து வருகின்றன. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளால் தண்ணீர் அதிகமாக சுரண்டப்படுகிறது. பூமியில் சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைந்து, வானிலை மாற்றம் ஏற்படுவதுடன் பருவம் தவறி அதிகப்படியான மழைப்பொழிவு பொதுவாக அதிகரித்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், நீர் மேலாண்மை குறித்து விவாதிப்பது மிகவும் பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்." என்றார்.

தண்ணீர் பிரச்சனை இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகமுழுவதுமே பொதுவான பிரச்சனையாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே, பரந்த அளவிலான நன்னீர் ஆதாரங்கள் பரவியுள்ள நிலையில், இப்பிரச்சனை தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாகவும் அமைகிறது என்று அவர் கூறினார். எனவே இந்த ஒருங்கிணைந்த நீர்வளம் குறித்த பிரச்சனைகளில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமானது என்று அவர் தெரிவித்தார். 7-வது இந்திய நீர்வார விழாவில், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டமைப்பில் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாறிகொள்ளப்படும்போது,அனைவரும் அதனால் பயனடைவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேளாண்மைக்கு நீர் முக்கிய ஆதரமாக திகழ்கிறது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். ஒரு மதீப்பிட்டின் அடிப்படையில் அந்நாட்டில் உள்ள மொத்த நீர்வளத்தில் 80 சதவீதம் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளதாகவம் அவர் கூறினார். எனவே, நீர் சேமிப்புக்கு பாசன முறைகளில் நீரின் சரியான பயன்பாடு மற்றும்  முறையான நீர் மேலாண்மை ஆகியவை மிக முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார். இப்பிரிவில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டம் (பிரதம மந்திரி க்ரிஷி சின்ச்சாய் யோஜனா) திட்டம் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார். தேசிய அளவிலான இந்த திட்டம் நாட்டின் பாசனப் பரப்பை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.  நீர் சேமிப்பு இலக்குகளுக்கு ஏற்ப, “ஒரு துளியில் அதிக பயிர்” என்ற அம்சத்தை உறுதி செய்ய துல்லியமான நீர்ப்பாசனம் மற்றும் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை இத்திட்டம் ஏற்று அதன்படி செயல்பாடுகளை கொண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தூய குடிநீரை விநியோகிப்பது வருங்காலங்களில் பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் கூறினார். நீர்ப்பிரச்சனை என்பது பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான அம்சமாக உள்ளது என்று கூறி்ய அவர், இதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் முயற்சிகள் அவசியம் என்றார். தண்ணீர் என்பது குறிப்பிட்ட வரம்புக்குள் உட்பட்டது என்பதை அனைவரும் உணர்ந்து முறையாக அவற்றை பயன்படுத்துவது மற்றும் நீர் மறு சுழற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளால்  மட்டுமே  நீர்வளத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். எனவே, இந்த வளத்தை அனைவரும் கவனமாக கையாள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  தண்ணீரின் முறையற்ற பயன்பாடு குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், நீர் சேமிப்பு குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  இந்த 7 வது நீர் வார கொண்டாட்டத்தின் பலன்கள்  இந்த பூமி மற்றும் மனித குலத்தின் நலனுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கையை தெரிவித்தார். பொதுமக்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள் மற்றும் குழந்தைகள் நீர் சேமிப்பை தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இப்படி செயல்படுவதன் மூலம் மட்டுமே இனி வரும் தலைமுறையினருக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நாம் பரிசளிக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

**************

 SM/PLM/RS/IDS


(Release ID: 1872687) Visitor Counter : 227