வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வர்த்தக்கத்துறையினருக்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கோரிக்கை

Posted On: 29 OCT 2022 10:10AM by PIB Chennai

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நாட்டின் வர்த்தகத் துறையினரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய வைஷ்ய கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இந்திய தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், இதன் மூலம் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்க்கையும் வளமாகும் என்று தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகள் தங்களது நிதி ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ஐந்து சதவீதத்தை உள்ளூர் தயாரிப்புகளுக்கு செலவிட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கோரிக்கையை முன்வைத்த அவர், திறமைமிக்க நமது கலைஞர்கள், கைவினைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு ஆதரவளித்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

 

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 மடங்கு அதிகரித்திருப்பதை திரு கோயல் சுட்டிக்காட்டினார். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்காக போராடுவதில் இருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பதை உறுதி செய்வதற்காக கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களில் அரசு தீவிர கவனம் செலுத்தியதன் காரணமாக மக்களின் நிலை தற்போது பன்மடங்கு மேம்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். “நமது இளைஞர்கள் இப்போது தேவைகளுக்கான போராட்டங்களில் இருந்து விடுபட்டு, மிகுந்த லட்சியமிக்கவர்களாக உள்ளனர்.  புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும், தொழில்முனைவோராகவும் வளர்ச்சி அடைய அவர்கள் விரும்புகிறார்கள்”, என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்தியாவுடன் அந்நிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட வளர்ந்த நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும், உலகிலேயே மிக வேகமான ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே வெறும் 88 நாட்களில் நிறைவடைந்தது என்றும் திரு பியூஷ் கோயல் கூறினார். சமூக பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பிரிவினைப் போக்குகளுக்கு புதிய இந்தியாவில் ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

**********

MSV/RB/BD



(Release ID: 1871772) Visitor Counter : 144