நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரிச் சுரங்க ஏலம் மற்றும் உற்பத்தியில் தனியார் துறையுடன் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டியிட மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
17 OCT 2022 4:11PM by PIB Chennai
நிலக்கரி சுரங்க ஏலம் மற்றும் முன் கூட்டிய உற்பத்தியில் தனியார் துறையுடன் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டியிட மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி 2022-ல் உரையாற்றிய அமைச்சர், முன்னெப்போதும் இல்லாத வகையில், சர்வதேச ரீதியில் விலை உயர்ந்துபோதும், உள்நாட்டு நிலக்கரி விலையை இந்திய நிலக்கரி நிறுவனம், உயர்த்தவில்லை என்றார். மேலும், அண்மைகாலத்தில் நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரித்ததால், அனல்மின் நிலையங்கள் எதிர்கொண்ட நிலக்கரி பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.
2020ல் தொடங்கப்பட்ட வணிக ரீதியான ஏலத்தில் இதுவரை 64 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன என்று திரு ஜோஷி தெரிவித்தார். 2024 வாக்கில், அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி இறக்குமதியை நிறுத்த முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், வர்த்தக ரீதியிலான ஏலத்தின் கீழ் முன்கூட்டியே நிலக்கரி உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றார். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் சிறந்த செயல்பாட்டை எடுத்துரைத்த அமைச்சர், இந்தாண்டு நிலக்கரி சுரங்கங்களில் 125 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியாக கூடும் என்றார்.
இந்த மாநாட்டின் போது, 15-வது தொகுப்பு நிலக்கரி விற்பனையின் கீழ் வெற்றிகரமாக 10 நிலக்கரிச் சுரங்க ஏலதார்களுடன், நிலக்கரி அமைச்சகம் வெற்றிகரமாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. 13-வது மற்றும் 14-வது தொகுப்பின் இரண்டாவது கட்ட ஏல முயற்சியும் நடைபெற்றது.
இந்த 10 நிலக்கரிச் சுரங்கங்கள் மூலமான ஆண்டு வருவாய் ரூ.1077.67 கோடியாக இருக்கும் என்றும், ஓராண்டு உற்பத்தி 10.39 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கங்கள் முழுமையாக செயல்படும்போது, நேரடியாகவும், மறைமுகமாகவும் 14,047 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுரங்கங்களை செயல்படுத்த மொத்தம் ரூ.1558.50 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
“இந்திய நிலக்கரித் துறை –தற்சார்பு இந்தியாவை நோக்கிய நீடிக்கவல்ல சுரங்கப்பணி” என்ற மையப்பொருளுடன் முதன் முறையாக இந்த தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி 2022-க்கு நிலக்கரி அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்திய தேசிய உலக சுரங்கங்கள் பேரமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1868505
**************
SMB/RS/ ANANDH
(Release ID: 1868542)
Visitor Counter : 190