உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில், அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தியில் 'போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு' குறித்து அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுடனான கூட்டம் இன்று நடைபெற்றது.
Posted On:
08 OCT 2022 9:02PM by PIB Chennai
‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு' குறித்து அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுடனான கூட்டம் இன்று அஸ்ஸாம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. வடகிழக்கு பிராந்தியத்தில் போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்தும் நிலைமை, அதனைக் குறைப்பதற்கான வழிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலாளர், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் (என்சிபி) தலைமை இயக்குநர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் கடத்தல் பரவுவது எந்த சமூகத்திற்கும் மிகவும் ஆபத்தானது. பயங்கரவாத சம்பவத்தால் ஏற்படும் சேதம் குறைவாக உள்ளது, ஆனால் சமூகத்தில் போதைப்பொருள் பரவல் தலைமுறைகளை அழிக்கிறது. கரையான்போல் அரித்து நம் சமூகத்தின், நாட்டின் இளைஞர் சக்தியை வெறுமையாக்குகிறது என்று இந்தக் கூட்டத்தில் அமித்ஷா கூறினார்.
சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், பிரதமர் நரேந்திர மோடியின், 'போதையில்லா இந்தியா' திட்டத்தை நிறைவேற்ற, உள்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தையும், தேசப் பாதுகாப்பையும் சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்டுக் குற்றம் செய்வோரின் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சகிப்பின்மை கொள்கையைக் கடைப்பிடித்துவருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று வடகிழக்குப் பிராந்தியம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கிலோகிராம் போதைப்பொருள் அழிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், 75 ஆயிரம் கிலோகிராம் போதைப்பொருட்களை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இலக்கை விட இரண்டு மடங்கு அதிகமாக 1.5 லட்சம் கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று திரு ஷா கூறினார்.
2006-2013 க்கு இடையில் மொத்தம் 1257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2014-2022 க்கு இடையில் 152 சதவீதம் அதிகரித்து 3172 ஆக இருந்தது என்று திரு ஷா தெரிவித்தார். இதே காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1362 இல் இருந்து 260 சதவீதம் அதிகரித்து 4888 ஆக அதிகரித்துள்ளது. 2006-2013 ஆம் ஆண்டில் 1.52 லட்சம் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது, இது 2014-2022 க்கு இடையில் 3.30 லட்சம் கிலோவாக இருமடங்கு அதிகரித்துள்ளது. 2006-2013 ஆம் ஆண்டில் 768 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, இது 2014-2022 க்கு இடையில் 25 மடங்கு அதிகரித்து 20,000 கோடி ரூபாயாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
தீவிரமான கண்காணிப்புக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், அதை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து வடகிழக்கு மாநில முதல்வர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை ஆதி முதல் நுனிவரை செய்வதன் மூலமே அதன் முழு வலையமைப்பையும் அழிக்க முடியும் என்று அவர் கூறினார்.
****
(Release ID: 1866224)
Visitor Counter : 340