பிரதமர் அலுவலகம்

உதவி செயலாளர் நிகழ்ச்சி 2022-ன் நிறைவு அமர்வில். 2020 தொகுப்பின் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றினார்


முழுமையான அரசின் அணுகுமுறையுடன்  அரசு எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்பது பற்றி பிரதமர் விவாதித்தார்

நவீன சிந்தனை, முழுமையான அணுகுமுறை, மக்கள் பங்கேற்பு உணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை  பிரதமர் எடுத்துரைத்தார்

அமிர்த காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதை உறுதி செய்வதில் அதிகாரிகளின்  பங்கு முக்கியமானது: பிரதமர்

ஒரு மாவட்டம், ஒரு பொருள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்

ஏற்கனவே மக்கள் நிதித்திட்டத்தின் வெற்றியை எடுத்துரைத்த பிரதமர், டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலமும், யுபிஐ மூலமும், கிராமங்களில் உள்ள மக்கள் இணைக்கப்படுவதை  உறுதி செய்வதை நோக்கி பணியாற்றுமாறு  அதிகாரிகளை வலியுறுத்தினார்

ராஜபாதை என்ற மனநிலை இப்போது கடமைப்பாதை என்ற உணர்வாக மாற்றம் அடைந்துள்ளது: பிரதமர்

Posted On: 06 OCT 2022 6:38PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று காலை உதவி செயலாளர் நிகழ்ச்சி 2022-ன்  நிறைவு அமர்வில். 2020 தொகுப்பின் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அமிர்த காலத்தில் நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அதிகாரிகள், பெற்றுள்ளதாக கூறியதுடன், 5 உறுதி மொழிகளை  நிறைவேற்ற உதவ வேண்டும் என்றார்.  அமிர்த காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதை உறுதி செய்வதில் அதிகாரிகளின்  பங்கு முக்கியமானது என்று அவர் கூறினார். நவீன சிந்தனை, தங்களின் முயற்சிகளில் முழுமையான அணுகுமுறையை கடைப்பிடித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை  அவர் எடுத்துரைத்தார். இத்தகைய முழுமையான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தை அவர் உதாரணமாக காட்டினார்.

புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் பற்றியும் நாட்டின்  கூட்டு முயற்சி மற்றும் பணிக் கலாச்சாரத்தின் பகுதியாக இது எவ்வாறு மாறியிருக்கிறது என்பது பற்றியும் பிரதமர் விவாதித்தார். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் பற்றி பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில்,  நாட்டில் இந்தத் திட்டத்தின் மூலம் புதிய தொழில்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டினார். பல அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து வந்தது மற்றும்  முழுமையான அரசின் அணுகுமுறையுடன்  ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக இது சாத்தியமானது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தில்லிக்கு வெளியே நாட்டின் அனைத்து பிராந்தியங்களுக்கும் நிர்வாகத்தை மாற்றுவதில்  கவனம் செலுத்தியது பற்றி  பிரதமர், எடுத்துரைத்தார்.   தில்லிக்கு வெளியே  உள்ள இடங்களில் தற்போது முக்கியமான திட்டங்கள் தொடங்கப்படுவதன் உதாரணங்களையும் அவர் வழங்கினார்.  பணி செய்யும் பகுதியின் உள்ளூர் கலாச்சாரத்தை புரிந்து கொண்டு அடித்தள நிலையில், உள்ளூர் மக்களுடனான தங்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் யோசனை தெரிவித்தார். ஒரு மாவட்டம், ஒரு பொருள் என்பதில் கவனம் செலுத்துமாறும் தங்கள் மாவட்டத்தில் ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களின் சந்தை வாய்ப்புகளை கண்டறியுமாறும், அவர் கேட்டுக் கொண்டார். முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்திற்கான செயல் திட்டத்தை தயாரிக்குமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றி பேசிய பிரதமர், மிகத் தீவிரமான முறையில், இதனை அமல்படுத்துமாறு கூறினார். மக்கள் பங்கேற்பு உணர்வின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய அவர், இந்த அணுகுமுறை ஊட்டச்சத்துக் குறைபாட்டை களைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

ஏற்கனவே மக்கள் நிதித்திட்டத்தின் வெற்றியை எடுத்துரைத்த பிரதமர், டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலமும்யுபிஐ மூலமும், கிராமங்களில் உள்ள மக்கள் இணைக்கப்படுவதை  உறுதி செய்வதை நோக்கி பணியாற்றுமாறு  அதிகாரிகளை வலியுறுத்தினார். தேசத்திற்கு சேவை செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், ஒருவரது கடமைகளின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.  ராஜபாதை என்ற மனநிலை இப்போது கடமைப்பாதை என்ற உணர்வாக மாற்றம் அடைந்துள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது உதவி செயலாளர்களால் எட்டு செயல்திட்டங்கள் பிரதமரிடம் விவரிக்கப்பட்டன.  ஊட்டச்சத்து கண்காணிப்பு: ஊட்டச்சத்து திட்டத்தின் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான கருவி; பாஷினி மூலம் டிஜிட்டல் அடிப்படையில் பன்மொழி குரல் கிடைப்பதற்கு வகை செய்தல்;  பெருநிறுவன தரவுகள் மேலாண்மை; அன்னைபூமி புவி இணையப்பக்கம் -  நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த இந்தியாவின் தேசிய புவி இணையபக்கம்; எல்லைப்புற சாலைகள் அமைப்பின் சுற்றுலா திறன், இந்தியா போஸ்ட்,  பணப்பட்டுவாடா வங்கி மூலம், அஞ்சலகங்களின் முகத்தை மாற்றுதல், மணல் திட்டுகள் போன்ற செயற்கையான கட்டுமானங்கள் மூலம் கடலோர மீன்பிடிப்பை மேம்படுத்துதல், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு -  எதிர்காலத்திற்கான எரிபொருள் ஆகியவை விவரிக்கப்பட்ட செயல் திட்டங்களில் அடங்கும். 2020 தொகுப்பைச் சேர்ந்த  மொத்தம் 175 ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு 11.07.2022 முதல் 07.10.2022 வரை  மத்திய 

அரசின் 63 அமைச்சகங்கள் / துறைகளில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

----- 

SMB/Gee/Sanjay



(Release ID: 1865680) Visitor Counter : 121