தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2030-ஆம் ஆண்டுக்குள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் வளர வேண்டும்: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 2022 விரைவுத் தடம் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் வலியுறுத்தல்

Posted On: 27 SEP 2022 2:24PM by PIB Chennai

2030-ஆம் ஆண்டுக்குள் தொழிற்துறையை 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்த்துவதற்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா, ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளை வலியுறுத்தியுள்ளார். “அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10 டிரில்லியன் டாலர்களாக வளர்ச்சியடையும். 2030-ஆம் ஆண்டுக்குள், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத்துறை 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்வதற்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சம் செய்யும்” என்றும் இன்று(செப்டம்பர் 27 2022) அன்று மும்பையில் நடைபெற்ற, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் 2022-இன் விரைவுத் திட்ட தொடக்க விழாவில் உரையாற்றிய அபூர்வ சந்திரா தெரிவித்தார்.

திரைப்படத் துறையில் அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்தப் போவதாக அவர் கூறினார். “திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவுகளை அமைச்சகம் ஒன்றாக இணைத்துள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டுள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், திரைத்துறையின் முக்கிய இடமாக விளங்கப் போகிறது. இதற்காக திரைத்துறையை சீரமைக்க விரும்புகிறோம். தொழிற்துறையை ஈர்க்கும் வகையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் அரசு உருவாக்கியுள்ள இன்வெஸ்ட் இந்தியாவிடம் இதனை ஒப்படைக்க உள்ளோம். நடப்பு ஆண்டில் இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீடுகள் வரவுள்ளன. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு இன்வெஸ்ட் இந்தியாவை பயன்படுத்த விழைகிறோம். இதன் மூலம் வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களை இந்தியாவுக்குள் வரச்செய்வோம்”.

இந்தியாவில் திரைப்பட படப்பிடிப்பை எளிதாக்கவும், ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் என்று செயலாளர் தெரிவித்தார். “அண்மையில் கேன் திரைப்பட விழாவில், ஒலி-ஒளி இணைத்தயாரிப்புக்கான ஊக்கத் திட்டம், இந்தியாவில் வெளிநாட்டுத் திரைப்படங்களை படப்பிடிப்பு செய்வதற்கான ஊக்கத் திட்டத்தையும் அறிவித்தோம். மாநிலங்கள் அளிக்கும் சலுகைகளுடன் இது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சாதகமான, கவர்ச்சிகரமான திட்டமாக மாறும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862505

                                                **************

KG/SM(Release ID: 1862623) Visitor Counter : 81