மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2022 5:34PM by PIB Chennai
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோரை பல்கலைக் கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.
முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் அமைச்சர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பின்னர், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 274 மாணவர்களுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்கினார்
பின் பட்டமளிப்பு உரையாற்றிய அவர், மின்னணு பரிமாற்றத்தில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும் 2023 ஆம் ஆண்டிற்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிகல் பைபர் சேவையைப் பெறும் என்றும் நமது நாடு பழமையான கலாச்சாரத்தையும் மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கொரோனா காலத்தில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் பெரிதும் உதவிகரமாக இருந்ததாகவும் அவர் பேசினார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும்,ஒருவர் தாய்மொழியில் பயிலும்போது சிரமமான பாடங்களையும் எளிதாக கற்க முடியும் என்றும், மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து நபர்களுக்காவது வேலை தரும் வண்ணம் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து,தஞ்சாவூரில் சர்வோதய கேந்திரத்தில் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை மத்திய அரசின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தகவல் ஒலிபரப்பு மற்றும் பால்வளம், கால்நடை, மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
சர்வோதய கேந்திரத்தில் தயாரிக்கப்படும் குத்துவிளக்கு, மாலைகள் மற்றும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக சர்வோதய கேந்திர பல வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சர்வோதய கேந்திரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாம் பங்கேற்றதன் நினைவாக கதர் ஆடைகளை பணம் கொடுத்து வாங்கி சென்றார்.
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1860420)
வருகையாளர் எண்ணிக்கை : 273