விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண்மையில் பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சி திட்டங்களை ஈர்க்கும் கூட்டு முன்முயற்சியை மத்திய வேளாண் அமைச்சம், ஃபிக்கி ஆகியவை தொடங்கியுள்ளன

Posted On: 08 SEP 2022 4:54PM by PIB Chennai

வேளாண்மையில் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சி குறித்த திட்ட மேலாண்மை அலகை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு தோமர், வேளாண்மை துறையை வலுப்படுத்துவதன் மூலம் மற்ற துறைகளும் வலுப்படும் என்று கூறினார். வேளாண்மை துறையின் வளர்ச்சிக்கு கூட்டுமுயற்சி திட்டங்கள் பெரிதும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

வேளாண்மை துறையை மேம்படுத்துதல், நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் மிகவும் முக்கியம் என்று கூறிய திரு தோமர், அரசு மட்டுமே அனைத்து பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்வது சரியாக இருக்காது என்றும், பொதுமக்களின் பங்களிப்பால் மட்டுமே சிறப்பான நிலையை அடைய முடியும் என்று கூறினார். எந்த துறையாக இருந்தாலும் அதன் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புடன் மட்டுமே அரசு சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

 பிரதமர் திரு நரேந்திரே மோடி தமது எட்டு ஆண்டு கால ஆட்சியில் 1500க்கும் மேற்பட்ட பயனற்ற சட்டங்களை ரத்து செய்து, நிர்வாகத்தை எளிதாக்கியிருக்கிறார் என்று அமைச்சர் கூறினார். இது சாதார மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிக்கி போன்ற அமைப்புகளை இதில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் உட்கட்டமைப்பு நிதி, பத்தாயிரம் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை  உருவாக்குதல், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் வேளாண்மைத் துறையை வலுப்படுத்த அரசு, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்தி குறிப்பைக்காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857819 



(Release ID: 1857837) Visitor Counter : 162