பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மங்களூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 02 SEP 2022 5:10PM by PIB Chennai

கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

இந்திய கடல்சார் சக்திக்கு இன்று ஓர் முக்கிய தினம். நாட்டின் ராணுவ பாதுகாப்பிலும் பொருளாதார பாதுகாப்பிலும் இன்று இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை சந்தித்து வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் கொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம் அளிக்கிறது. 

தற்போது மங்களூருவில் ரூ. 3700 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் கர்நாடகாவின் வர்த்தகங்கள் மற்றும் தொழில்களுக்கு வலு சேர்ப்பதுடன் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதையும் ஊக்குவிக்கும். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பில் முன் எப்போதும் இல்லாத வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரத் மாலா திட்டத்தின் மூலம் எல்லை மாநிலங்களின் சாலை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் வேளையில் சாகர்மாலா திட்டத்தினால் கடல்சார் உள்கட்டமைப்பிற்கு ஆற்றல் அளிக்கப்படுகிறது.

சகோதர, சகோதரிகளே,

கடந்த சில ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, நாட்டு வளர்ச்சியின் முக்கிய தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இது போன்ற முயற்சிகளின் விளைவாக இந்திய துறைமுகங்களின் திறன் கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மங்களூர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் துறைமுகத்தின் திறன் மற்றும் தரத்தை அதிகரிக்க உள்ளன. எரிவாயு சேமிப்பு மற்றும் திரவ சரக்கு சம்பந்தமாக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நான்கு திட்டங்கள் கர்நாடகாவிற்கும், நாட்டிற்கும் சிறந்த பயனை வழங்க உள்ளன. சமையல் எண்ணெய், எல்பிஜி எரிவாயு உள்ளிட்டவற்றின் இறக்குமதி செலவையும் இது குறைக்கும்.

நண்பர்களே,

அமிர்த காலத்தில் பசுமை வளர்ச்சி என்ற உறுதிப்பாடுடன் இந்தியா முன்னேறி வருகிறது. பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை வேலைகள் முதலியவை புதிய வாய்ப்புகளாக அமைந்துள்ளன. இன்று சுத்திகரிப்பு ஆலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகளும் நமது முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றன. இந்த சுத்திகரிப்பு ஆலை இதுவரை நதி நீரை சார்ந்திருந்தது. கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, இந்த சார்பை குறைக்கும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நவீன உள்கட்டமைப்பில் இந்தியா தற்போது கவனம் செலுத்தி வருகிறது. மங்களூரில் காணப்படும் ஆற்றல் சக்தி, வளர்ச்சி பாதையை தொடர்ந்து ஒளிமயமாக்கட்டும். இந்த நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**************


(Release ID: 1856612) Visitor Counter : 173