பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 செப்டம்பர் 5 முதல் 7 வரை இத்தாலியின் மிலன் நகருக்குப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி பயணம்

Posted On: 04 SEP 2022 8:56AM by PIB Chennai

காஸ்டெக் மிலன்-2022-ல் கலந்துகொள்வதற்காக, 2022 செப்டம்பர் 5 முதல் 7 வரை இத்தாலியின் மிலன் நகருக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை  அமைச்சர் திரு  ஹர்தீப் எஸ். பூரி அதிகாரபூர்வ மற்றும் வணிகக் குழுவிற்குத் தலைமைதாங்கி செல்லவிருக்கிறார்.

காஸ்டெக் என்பது திரவ எரிவாயுவை மாற்று எரிபொருளாக கவனப்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய கூடுகையாகும். இது  அதிகரித்து வரும் எரிசக்தி நிலைமை  பற்றி விவாதிக்கவும், பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை மதிப்பிடவும்,  ஒரு நியாயமான எரிசக்தி மாற்றத்திற்கான பாதையில் செல்லவும் முன்னணி அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளை ஒன்றிணைக்கும்.

இந்தப் பயணத்தின் போது, எகிப்தின் பெட்ரோலியம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர், போர்ச்சுகல் நாட்டின் எரிசக்தி துறை அமைச்சருடன் இணைந்து தொடக்க விழாவில்  தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் குழுவில் திரு பூரி  பங்கேற்பார். "எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மாற்றம்",  "வளரும் நாடுகளுக்கு ஒரு நியாயமான எரிசக்தி மாற்றம்" ஆகிய  தலைப்புகளிலான  அமைச்சர் குழு விவாதங்களிலும் அவர் பங்கேற்பார்.

"இந்தியா ஸ்பாட்லைட்: இந்தியாவின் எரிசக்தித் தொழில்துறையை மேம்படுத்துதல் - நீடித்த  எதிர்காலத்திற்கான புதிய வழிகள்"  என்ற குழு விவாதத்திற்கு திரு பூரி தலைமை தாங்குவார்.

மேலும், இந்தப்  பயணத்தின் போது, தமக்கு இணையான அமைச்சர்கள் மற்றும் காஸ்டக் மிலான்-2022 இல் கலந்து கொள்ளும் உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை அமைச்சர் நடத்துவார்.

கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்திய எரிசக்தி நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளையும் அவர் திறந்து வைப்பார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையையும், இந்தியா முழுவதுமுள்ள எரிசக்தி மதிப்புச் சங்கிலியில்   இருக்கும் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைக்க இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.

பெங்களூருவில் 2023 பிப்ரவரி 5 முதல் 8 வரை திட்டமிடப்பட்டுள்ள அமைச்சகத்தின் முதன்மை நிகழ்வான இந்திய எரிசக்தி வாரம், இந்தப்  பயணத்தின் போது அமைச்சரால் தொடங்கப்படும்.

******


(Release ID: 1856611) Visitor Counter : 188