ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் டாக்டர்.மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்

Posted On: 29 AUG 2022 1:55PM by PIB Chennai

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியா இன்று உரையாற்றினார். மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு.பகவந்த் கூபா அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் உரையாற்றிய டாக்டர்.மன்சுக் மாண்டவியா, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒரு மருந்து கட்டுப்பாட்டாளராக மட்டுமின்றி, மருந்துகள் எளிதில் கிடைக்கும் வகையில் பணியாற்றுவதாகவும் பாராட்டு தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகாள மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் குறிப்பிட்ட பங்களிப்பை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து தரமான மருந்துப் பொருட்களை தயாரித்து வரும் இந்திய தொழில்துறையினரை அமைச்சர் பாராட்டினார். வணிக நோக்கத்துக்காக மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், மருந்துகளை தயாரிக்க வேண்டும், புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று மாண்டவியா உறுதியளித்தார். மருந்துகளுக்குத் தேவையான முக்கியமான பல மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் உதவி செய்வதாக அமைச்சர் எடுத்துரைத்தார். கொவிட் பெருந்தொற்று நேரத்தில், இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பை அவர் நினைவுகூர்ந்தார். மேலும், மக்களுக்கு தரமான சுகாதார சேவையை அளிப்பதில், தொழில்துறைக்கும், அரசாங்கத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு.பகவந்த் கூபா, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், கடந்த 25 ஆண்டுகளாக நாட்டுக்கும், மருந்துகள் துறைக்கும் சேவையாற்றி வருவதாக பாராட்டு தெரிவித்தார். “தொழில்துறையினருக்கு தீங்கு விளைவிக்காமல், மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உறுதி செய்வதாக”வும் அவர் குறிப்பிட்டார்.

தொடக்க அமர்வில், மருந்து தரவு நிர்வாக நடைமுறை 2.0 (ஐடிபிஎம்எஸ் 2.0) இணையதளம் மற்றும் நவீனப்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய ஃபார்மா சாஹி தாம் 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. வணிகம் செய்வதை எளிதாக்கும் அரசின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான படிவங்களையும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்கச் செய்ய இது உதவும். மேலும் நாடு முழுவதிலும் உள்ளவர்கள் தேசிய மருந்து விலை நிர்ணைய ஒழுங்குமுறை ஆணையத்துடன் தொடர்பு கொள்ள காகிதம் இல்லா செயல்பாட்டையும் இது கொண்டிருக்கும். பேச்சை அறிதல், தேடப்படும் மருந்துகளின் நிறுவனம், நுகர்வோர் புகார்களைக் கையாளும் முறை போன்றவை ஃபார்மா சாஹி தாம் 2.0 செயலியின் சிறப்பு அம்சங்கள்.

விழாவில் தொடர்ந்து பேசிய பகவந்த் கூபா, “இந்த இரண்டு பயன்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வரும் நாட்களிலும் சிறப்பாகவும், திறமையாகவும் பணியாற்றும்” என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

விழாவில், “தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின், 25 ஆண்டு பயணத்தின் காலவரிசைப்படியான தொகுப்பும்” வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பு, ஆணையத்தின் 25 ஆண்டு பயணத்தை மட்டும் கொண்டிருக்காமல், மருந்துகளின் விலை நிர்ணயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, மருந்து ஒழுங்குமுறையின் வளர்ச்சியையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855228

***************




(Release ID: 1855278) Visitor Counter : 230