பிரதமர் அலுவலகம்

பெரிமிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பங்கேற்ற இந்திய வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை

Posted On: 13 AUG 2022 2:30PM by PIB Chennai

உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.  

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் நாடு திரும்பிய பிறகு வெற்றியை இணைந்து கொண்டாடுவோம் என்று காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக நான் உங்களுக்கு வாக்கு அளித்திருந்தேன். வெற்றியைக் கொண்டாடும் தருணம், இது. விளையாட்டுத்துறையில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டியதில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதற்காக நீங்கள் பாராட்டுக்குரியவராகிறீர்கள். 

நண்பர்களே,

பதக்கங்களின் எண்ணிக்கையை மட்டுமே வைத்து உங்களது செயல்பாட்டை மதிப்பிடுவது சரியாக இருக்காது. இந்த முறை பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள். நமது நன்கு பரிட்சயப்பட்ட விளையாட்டுகளை நாம் வலுப்படுத்துவதோடு, புதிய விளையாட்டுகளிலும் நாம் தடம் பதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒப்பிடுகையில் நான்கு புதிய விளையாட்டுகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். லான் பவுல் முதல் தடகளம் வரை நமது வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள். இத்தகைய செயல்பாட்டினால் புதிய விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வம் பெருமடங்கு அதிகரிக்க உள்ளது. புதிய விளையாட்டுகளில் நமது செயல்பாட்டை இதே போன்று தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். எதிர்பார்த்ததைப் போலவே நமது மூத்த  வீரர்கள் இளம் வீரர்களை வழிநடத்தி அவர்களை ஊக்குவித்தனர். மறுபுறம் நமது இளம் தடகள வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். முதன்முறை பங்கேற்றவர்களில் 31 பேர் பதக்கங்கள் வென்றனர். அதிகரித்து வரும் நம் இளைஞர்களின் நம்பிக்கையை இது எடுத்துரைக்கிறது. 

நண்பர்களே,

நாட்டிற்காக நீங்கள் பதக்கங்கள் பெற்று, பெருமைப்படுவதற்கான வாய்ப்பைத் தருவது முக்கியமல்ல. மாறாக ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை நீங்கள் வலுப்படுத்துகிறீர்கள். விளையாட்டில் மட்டுமல்லாமல் இதர துறைகளிலும் சிறப்பாக செயல்பட நமது இளைஞர்களுக்கு நீங்கள் எழுச்சியூட்டுகிறீர்கள். மீண்டும் ஒரு முறை உங்கள் வெற்றி பயணத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*********



(Release ID: 1851714) Visitor Counter : 150