குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியாவின் 14 வது குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக திரு ஜக்தீப் தன்கர் பதவியேற்றார்
Posted On:
11 AUG 2022 1:53PM by PIB Chennai
இந்தியாவின் 14 வது குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக திரு ஜக்தீப் தன்கர் இன்று (11.08.2022) பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல வழக்கறிஞரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான திரு தங்கருக்கு, குடியரத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்புக்கு முன்னதாக, திரு தங்கர், இன்று காலை ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். “ராஜ்காட்டின் அமைதியான, கம்பீர சூழலில் பாபுவிற்கு மரியாதை செலுத்தியபோது, தேச பணியாற்றுவதற்கு அவர் என்னை ஆசீர்வதித்து, ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தியதாக உணர்ந்தேன்” என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திரு ஜக்தீப் தங்கரின் வாழ்க்கைக் குறிப்பு வருமாறு:-
கல்வி மற்றும் தொழில் பின்னணி
திரு தங்கர், தமது ஆரம்ப பள்ளிப்படிப்பை கிதானா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்றார். அதன் பிறகு கார்தானா அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சித்தோர்கர் சைனிக் பள்ளியில் பயின்றுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இயற்பியலில் பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டப்படிப்பை திரு தங்கர் முடித்தார். அதன்பிறகு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பிஎல் பட்டப்படிப்பு பயின்றார்.
வழக்கறிஞராக தமது தொழிலை தொடங்கிய திரு ஜக்தீப் தங்கர், அவரது குடும்பத்தில் முதல் தலைமுறை வழக்கறிஞர் என்பதோடு, நாட்டின் முன்னணி சட்டநிபுணர்களில் ஒருவராக உயர்ந்தார். 1990-ல் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். அப்போதிலிருந்து, தொடக்கத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிய அவர், எஃகு, நிலக்கரி, சுரங்கத்துறை தொடர்பான வழக்குகள் மற்றும் சர்வதேச வர்த்தக நடுவர்மன்ற வழக்குகளிலும் ஆஜராகிவந்தார். நாட்டில் உள்ள பல்வேறு உயர்நீதி மன்றங்களிலும் ஆஜராகியுள்ள அவர், 30, ஜூலை 2019 அன்று மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்கும் வரை, ராஜஸ்தான் மாநிலத்தின் மிக மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் மிக இளைய தலைவராக 1987ல் திரு தங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டு கழித்து அவர், 1988ல் ராஜஸ்தான் பார் கவுன்சில் உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்ற மற்றும் பொதுவாழ்க்கை:-
திரு ஜக்தீப் தங்கர், 1989- ம் ஆண்டு தேர்தலில் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து. 1990 ல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராக அவர் பொறுப்பு வகித்துள்ளார். 1993ல் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிசான்கர் தொகுதியிலிருந்து ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, மக்களவை மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவையின் முக்கிய குழுக்களின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சர் என்ற முறையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சென்ற நாடாளுமன்ற தூதுக்குழுவின் துணைத்தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.
ஜுலை 2019ல் திரு தங்கர், மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
சுய விவரங்கள்
பெயர் : திரு ஜக்தீப் தங்கர்
தந்தை பெயர் : காலஞ்சென்ற திரு கோகல் சந்த்
தாயார் பெயர் : காலஞ்சென்ற திருமதி கேசரி தேவி
பிறந்த தேதி : 18, மே 1951
பிறந்த இடம் : கிதானா கிராமம், ஜுன்ஜுனு மாவட்டம்,
ராஜஸ்தான்
திருமண நிலை : திருமணமானவர் (1979ம் ஆண்டு)
மனைவி பெயர் : டாக்டர் சுதேஷ் தங்கர்
குழுந்தைகள் : ஓரே மகள் (திருமதி காம்னா)
புத்தகம் படிப்பதில் ஆர்வம் மிகுந்த திரு தங்கர், சிறந்த விளையாட்டு ஆர்வலர் என்பதோடு, ராஜஸ்தான் ஒலிம்பிக் சங்கம் மற்றும் ராஜஸ்தான் டென்னிஸ் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இசைகளை கேட்டுமகிழ்வதும், பயணம் செய்வதும் அவரது பொழுது போக்கு ஆகும். அவர், அமெரிக்கா, கனடா, இத்தாலி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, சீனா, ஹாங்ஹாங், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
*****
(Release ID: 1850921)
|