தேர்தல் ஆணையம்

இந்தியாவின் 14 வது குடியரசு துணைத்தலைவராக திரு ஜக்தீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கையெழுத்திட்டனர்

Posted On: 07 AUG 2022 2:05PM by PIB Chennai

பதினாறாவது குடியரசு துணைத்தலைவர்  தேர்தலுக்கான அட்டவணையை ஜூன் 29, 2022 அன்று வெளியிட்ட தேர்தல் ஆணையம், ஆகஸ்ட் 6, 2022 அன்று வாக்குப்பதிவு மற்றும் எண்ணும் தேதியாக நிர்ணயித்தது. திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 6, 2022 அன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 780 வாக்காளர்களில் 725 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர், அவர்களில் 15 வாக்குச் சீட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலின் தேர்தல் அதிகாரியான, மக்களவையின்  செயலாளர், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவராக திரு ஜக்தீப் தன்கர் ஆகஸ்ட் 6, 2022 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். இந்தியக் குடியரசின் பதினான்காவது துணைத் தலைவராக திரு ஜக்தீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழில், தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்  திரு எஸ். அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கையெழுத்திட்டதன் மூலம் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை நடைமுறைகள் முடிவுக்கு வந்துள்ளன.

கையொப்பமிடப்பட்ட நகலை மத்திய உள்துறை செயலாளரிடம் மூத்த துணை தேர்தல் ஆணையர் எஸ். தர்மேந்திர சர்மாமூத்த முதன்மைச் செயலாளர் நரேந்திர என். புடோலியா ஆகியோர் ஒப்படைத்தனர்.  11 ஆகஸ்ட் 2022 அன்று இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவின் போது இது வாசிக்கப்படும்.

தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் ஆணைய பார்வையாளர்கள், தில்லி காவல்துறை, சிஆர்பிஎஃப் ஆகியோரின் முழுக் குழுவிற்கும், மேற்கூறிய தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையம் தனது மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

•••••••••••••

 



(Release ID: 1849386) Visitor Counter : 10534