சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களின் 115 மாவட்டங்களில் கொவிட்-19 நிலைமையை மத்திய அரசு ஆய்வு செய்தது

கொவிட் நோயாளிகள் மற்றும் தொற்று அதிகரிப்பை வெளிப்படுத்திய ஆய்வு குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனை மற்றும் தடுப்பூசி கவலையை ஏற்படுத்தியுள்ளது

Posted On: 20 JUL 2022 2:58PM by PIB Chennai

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், மிசோராம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் கொவிட்-19 நிலைமை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநிலங்களில் தினசரி புதிய கொவிட் நோயாளிகள் அல்லது நோய் தொற்று அதிகரிப்பு காணப்பட்டது. கொவிட்-19-ன் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், நிர்வாகம் ஆகியவற்றுக்கான பொது சுகாதார நடைமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நித்தி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 1 மாதத்தில் இந்த மாநிலங்களில் கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து டாக்டர் வினோத் பால் கவலை தெரிவித்தார். அதிகபட்ச தொற்று உள்ள பகுதிகளில் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட கண்காணிப்பு உத்திகளின்படி கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். கொவிட் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று இந்த மாநிலங்களை அவர் வலியுறுத்தினார்.

கீழ்காணும் முக்கியமான கொவிட் கட்டுப்பாடு மற்றும் நிர்வாக உத்திகளை மத்திய சுகாதார செயலாளர் வலியுறுத்தினார்:

  1. அதிகபட்சமாக தொற்று விகிதம் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆர்டிபிசிஆர் சோதனைகளை போதிய அளவு மேற்கொள்வது அவசியமாகும். இதில் ஏற்படும் தொய்வு இந்த மாவட்டங்களில் நிலைமையை மோசமாக்கக் கூடும்.
  2. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்போரை தீவிரமாகவும், கண்டிப்புடனும் கண்காணிப்பது அவசியம். இதன் மூலமே அவர்கள் மற்றவர்களுடன் கலக்காமலும் அண்டை அயலார், கிராமம் உள்ளிட்ட மக்கள் பகுதிகளில் தொற்றினை பரவச் செய்யாமலும் தடுக்க முடியும்.
  3. 2022 ஜூன் 9 அன்று வெளியிடப்பட்ட, திருத்தியமைக்கப்பட்ட கண்காணிப்பு உத்தியின்படி கண்காணிப்பை மேற்கொள்ள இந்த மாநிலங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. மிகக் கடுமையான மூச்சுத்திணறல், இன்ஃபுளூவன்சா போன்ற நோய் குறித்து மாவட்ட வாரியான அறிக்கையை தினசரி அடிப்படையில் அனுப்புமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்படுகின்றன.
  4. தற்போது நடைமுறையில் உள்ள கட்டணமில்லாத 1,2 மற்றும் முன்னெச்சரிக்கை தவணை கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு இந்த மாநிலங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 2022 செப்டம்பர் 30 வரையிலான ‘கொவிட் தடுப்பூசி அமிர்தப் பெருவிழா’ திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கட்டணமில்லா முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ்கள் செலுத்துவதை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
  5. கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரவலாக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843015

 

****



(Release ID: 1843125) Visitor Counter : 176