பிரதமர் அலுவலகம்

கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் நிறுவனத்தின் (என்.ஐ.ஐ.ஓ) ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 18 JUL 2022 6:23PM by PIB Chennai

கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் நிறுவனத்தின் (என்.ஐ.ஐ.ஓ) ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
 நிகழ்ச்சியில் பேசிய அவர், பாதுகாப்பு படைகளில் தன்னிறைவு அடைவது என்ற இலக்கு 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார். கடற்படை, தன்னிறைவு அடைவதற்கு முதலாவது ‘ஸ்வாவ்லம்பன்’ (தற்சார்பு) கருத்தரங்கம்  முக்கிய நடவடிக்கையாகும். 
 “உள்நாட்டுமய தொழில்நுட்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இந்தியா தனது விடுதலையின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில் நமது கடற்படை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்பது உங்களது இலக்காக இருக்க வேண்டும்”, என்று பிரதமர் தெரிவித்தார். 
 சுதந்திரத்தின் தொடக்க தசாப்தங்களில் ராணுவத் துறையில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் அதிக கவனமும், வளர்ச்சியும் செலுத்தப்படவில்லை என்று பிரதமர் வேதனை தெரிவித்தார். “புதிய கண்டுபிடிப்புகள் என்பது மிகவும் முக்கியம், அது உள்நாட்டுமயமாக்கலாக இருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகளின் ஆதாரமாக இருக்க முடியாது”, என்று அவர் குறிப்பிட்டார். இறக்குமதி பொருட்கள் மீதான ஆர்வத்தின் மனநிலை மாற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
 நாட்டின் பொருளாதாரத்திற்கும், கேந்திர நிலையின் அடிப்படையிலும் தன்னிறைவான பாதுகாப்பு அமைப்புமுறை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக பிரதமர் கூறினார். 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு பிறர்சார்பை குறைப்பதற்கு விரைவான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களை வெவ்வேறு துறைகளில் வகைப்படுத்தியிருப்பதன் வாயிலாக அவற்றுக்கு அரசு புதிய ஆற்றலை வழங்கியிருப்பதாக பிரதமர் பெருமிதம் கொண்டார். “ஒவ்வொருவரின் முயற்சியுடன் புதிய பாதுகாப்பு சூழலை நாம் உருவாக்குகிறோம். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் தற்போது தனியார் துறை, கல்வி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்றன”, என்று கூறிய அவர், முற்றிலும் உள்நாட்டிலேயே  தயாரிக்கப்படும் முதல் விமான சேவை விரைவில் துவங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 4-5 ஆண்டுகளில் ராணுவப் பொருட்களின் இறக்குமதி சுமார் 21% குறைந்திருப்பதாகவும், கடந்த ஆண்டு ரூ. 13,000 கோடி மதிப்பிலான ராணுவப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதில் 70% தனியார் துறையினரின் பங்களிப்பு என்றும் அவர் கூறினார்.
“தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் பரவலாக மாறியுள்ளன, போர் முறைகளும் மாறி வருகின்றன. உலக அரங்கில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வேளையில், தவறான தகவல்கள், முரண்பாடான தகவல்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும். தற்சார்பு இந்தியாவுக்கு ‘முழுமையான அரசு’ என்ற அணுகுமுறையைப் போல, நாட்டின் பாதுகாப்பிற்கு ‘முழுமையான தேசம்' என்ற அணுகுமுறை தற்போதைய காலத்தின் கட்டாயம்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
*****
(Release ID: 1842433)



(Release ID: 1842571) Visitor Counter : 137