நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற அரசியல் கட்சி தலைவர்களுடன் அரசு நடத்திய கூட்டம் இன்று நடைபெற்றது


நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்

நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதத்தை அரசு விரும்புகிறது: திரு ராஜ்நாத் சிங்

Posted On: 17 JUL 2022 5:49PM by PIB Chennai

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, இரு அவைகளின் அனைத்துக் கட்சி தலைவர்களுடனான அரசின் கூட்டம் இன்று நடைபெற்றது.  நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, நாளை தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின்   ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று கூறினார். இந்த கூட்டத்தொடர்  26 நாட்களில் மொத்தம் 18 அமர்வுகள் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், தற்காலிகமாக 32 சட்ட முன்மொழிவுகள் எடுக்கப்படும் என்று கூறிய அவர், அவற்றில் 14 ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

நடைமுறை விதிகளின் கீழ் அனுமதிக்கப்படும் எந்தவொஅவையில் விவாதிக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார். மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாநிலங்களவை முன்னவரும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சருமான  திரு பியூஷ் கோயல்,  நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு. வி. முரளீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கூட்டத்தில் தீவிரமாகவும், திறம்படவும் பங்கேற்ற தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, விவாதம் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்ததாகப் பாராட்டு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வழக்கமான சட்டமியற்றும் பணிகள் மட்டுமின்றி, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையும் விவாதிக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

கூட்டத்தில் பிஜேபி  தவிர, காங்கிரஸ், திமுக, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம், பகுஜன் சமாஜ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமாஜ், சேதியவாத காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 35 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளவிருக்கும் மசோதாக்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விரிவான விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842215

***************



(Release ID: 1842225) Visitor Counter : 237