தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூர்தர்ஷன் தனது “ஸ்வராஜ்’ தொடருக்கான முன்னோட்டத்தை வெளியிட்டது

Posted On: 15 JUL 2022 6:37PM by PIB Chennai

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடி வரும் வேளையில், பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ’ஸ்வராஜ் - இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விரிவான கதைஎன்ற பெயரில் புதிய வரலாற்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்ட காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.

15 ஆம் நூற்றாண்டு முதல் நடக்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கதை 75 பகுதிகளாக ஒளிபரப்பாக உள்ளதுபிரபல திரைப்பட நடிகர் மனோஜ் ஜோஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடர் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு உயிர் கொடுக்கும், மேலும், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை விளக்கும் வகையில் இருக்கும்.

2022 ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடர், பல்வேறு மொழிகளில் அந்தந்த மண்டல தூர்தர்ஷன் அலைவரிசையில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இதன் ஒலி வடிவம் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த முன்னோட்டமானது, சுதந்திரப் போராட்டத்தின் போது என்ன நடந்தது என்பதற்கான பார்வை மட்டுமல்ல, புதிய இந்தியாவின் புதிய தூர்தர்ஷன் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு பார்வையும் கூட என்றார். நிகழ்ச்சிகள் முதல் செய்திகள் வரை தூர்தர்ஷன் படைப்புகள் தரம் வாய்ந்தவையாக உள்ளது என்றும், வரும் ஆண்டுகளில் இது மேலும், மேம்படுத்தப்படும் என அமைச்சர் உறுதி கூறினார். கொரோனா பெறுந்தொற்றிலும் ஸ்வராஜ் தொடருக்கான ஆய்வு & ஆலோசனையில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், ஸ்வராஜ் முன்னோட்ட காட்சி வெளியீட்டு நிகழ்ச்சிக்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி குழுவினரை பாராட்டினார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலர் திரு. அபூர்வ சந்திரா பேசுகையில், சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை இளைஞர்கள் தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக அறிந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இதுபோன்ற தரமான தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரசார் பாரதி தனது பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்வராஜ் தொடரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. ஜவஹர் லால் கவுல் பேசுகையில், இந்தியாவின் அனைத்துப் பகுதியில் உள்ள இந்திய சுதந்திரப் போரின் அறியப்படாத நாயகர்களை நிச்சயம் நினைத்துப் பார்க்க வேண்டுமென வலியுறுத்தினார். ஸ்வராஜ் ஆலோசனைக் குழுவின் ஆழமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு தொடரின் தயாரிப்புக்கான உள்ளடக்கத்தை வளப்படுத்தியது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி திரு மயங்க் குமார் அகர்வால், பிரசார் பாரதி உறுப்பினர் (நிதி) திரு. டி. பி. எஸ். நெகி, அகில இந்திய வானொலி தலைமை இயக்குனர் திரு. என். வி. ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.  


(Release ID: 1841886) Visitor Counter : 202