குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை வழிமுறைகளில் கவனம் செலுத்துமாறு குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
Posted On:
14 JUL 2022 1:25PM by PIB Chennai
தலசீமியா மற்றும் அரிவாள் வடிவம் பெற்ற சிவப்பணுவால் உருவாகும் ரத்த சோகை போன்ற மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை வழிமுறைகளின் முக்கியத்துவத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். மரபணு சார்ந்த நோய்களை துவக்கத்திலேயே கண்டறிந்து, அவற்றைக் குணப்படுத்துவதற்கு, குழந்தைகளிடையே மிகப்பெரிய அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.
ஐதராபாத்தின் தலசீமியா மற்றும் அரிவாள் செல் சங்கத்தில் ஆராய்ச்சி ஆய்வகம், மேம்பட்ட பரிசோதனை ஆய்வகம் மற்றும் 2-வது ரத்த மாற்று பிரிவு ஆகியவற்றை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு தனியார் துறையினர் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தார். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அல்லது ரத்த மாற்று சிகிச்சை முதலியவற்றின் செலவையும், குழந்தைகளின் மன உளைச்சலையும் கருத்தில் கொண்டு, இது போன்ற சவால்களை எதிர்கொள்ள விரிவான அணுகுமுறைக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
ஆண்டுதோறும் 10-15 ஆயிரம் குழந்தைகள் இந்தியாவில் தலசீமியா பாதிப்புடன் பிறப்பதாக குறிப்பிட்ட அவர், இது போன்ற நோய்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே, இவற்றைத் தடுப்பதற்கும், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கும் மிகப்பெரும் தடையாக இருக்கின்றன என்றார். எனவே மருத்துவர்கள், ஆசிரியர்கள், பிரபலங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தலசீமியா மற்றும் அரிவாள் செல் நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புமாறு அவர் வலியுறுத்தினார். சுகாதார வசதியை அனைவரும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கு, பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை இரண்டு மற்றும் மூன்றாம் தர நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தனியார் துறையினர் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்துமாறு திரு வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்தார்.
இளம் மருத்துவர்கள், முதுகலை படிப்புகளில் சேர்வதற்கு முன்பு கிராமப்புற பகுதிகளில் சேவையாற்றுவதை கட்டாயமாக்குவதன் மூலம் மருத்துவத்துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்று அவர் யோசனை தெரிவித்தார். தரமான மற்றும் மலிவான விலையில் மருத்துவ சேவை வழங்கப்படுவது, ஆளுகையின் மிக முக்கிய அம்சம் என்று கூறிய திரு நாயுடு, மத்திய, மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இது, அரசு மற்றும் தனியார் துறையினரின் கடமை என்றும் தெரிவித்தார்.
தலசீமியா மற்றும் அரிவாள் செல் சங்கத்தின் தலைவர் திரு சந்திரகாந்த் அக்ரவால், துணைத் தலைவர் திருமதி கே. ரத்தினவள்ளி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841433
-----
(Release ID: 1841534)
Visitor Counter : 205