பாதுகாப்பு அமைச்சகம்

தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு பாடுபடுவதன் மூலம் தேச நலன்களை பாதுகாக்குமாறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் அரசு சாராத இயக்குநர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 13 JUL 2022 2:39PM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு முன்முயற்சிகளின் சுமூகமான அமலாக்கத்தை உறுதி செய்யுமாறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் அரசு சாராத இயக்குநர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், அரசு சாராத இயக்குநர்கள், பயிலரங்கில் இன்று (ஜூலை 13, 2022) அவர் உரையாற்றினார்.

பாதுகாப்பு தளவாடங்கள், கொள்முதல் நடைமுறை 2020-ன் கீழ் பாதுகாப்பு தளவாடங்கள், கொள்முதல் நடைமுறையை எளிதாக்குவது உட்பட தற்சார்பை எட்டுவதற்கு பாதுகாப்புத்துறை மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகளை திரு ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.  அரசு மூலமாக  100 சதவீதம் வரையும், தாமாகவே கிடைப்பதன் மூலம் 74 சதவீதம் வரையும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பை அதிகரித்திருப்பது; உரிமம் பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்கியிருப்பது; பாதுகாப்பு துறைக்கு சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கான முன்முயற்சி; பாதுகாப்புத்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.

ரூ.35,000 கோடி மதிப்புக்கு பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி உட்பட 2025 வாக்கில், பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு பாதுகாப்புத்துறை  ரூ.1.75 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் கூறினார்.  இந்த இலக்கை எட்டுவதில் 70-80 சதவீத பங்களிப்பை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் செய்யும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களை  உலகளாவிய போட்டியாளராக மாற்றுவதற்கு அரசு சாரா இயக்குநர்களின் தீவிர ஈடுபாட்டின் அவசியத்தை திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். 2047 வாக்கில்  உலகின் முதன்மையான 100 பாதுகாப்பு தொழில் நிறுவனங்களில் 20 இந்திய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களை இடம் பெறச் செய்யும் வகையில் திட்டங்களை வகுக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு அரசு சாரா இயக்குநர்களின் பொறுப்பை உணர்த்துவது இந்த பயிலரங்கின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841184

------



(Release ID: 1841201) Visitor Counter : 169