நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்கள் உடனடியாக ரூ.15 அளவுக்கு விலையைக் குறைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted On: 08 JUL 2022 3:53PM by PIB Chennai

உணவு மற்றும் பொது விநியோகத் துறை,  கடந்த 6-ந்தேதி நடைபெற்ற  கூட்டத்தில், சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் ரூ.15-ஐ   உடனடியாக அமலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

விலைகுறைப்பு  எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க,  உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உற்பத்தியாளர்கள்/சுத்திகரிப்பு செய்பவர்களால் விநியோகஸ்தர்களுக்கு விலை குறைப்பு ஏற்படும்போதெல்லாம், அதன் பயனை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற பிராண்டுகளை விட விலை அதிகமாக உள்ள, விலையைக் குறைக்காத சில நிறுவனங்கள், அவற்றின் விலையைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டத்தின் போது, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிச் செல்வது, மிகவும் சாதகமான நிலை என்றும், எனவே, உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலைக்குறைப்பை உள்நாட்டு சமையல் எண்ணெய் தொழில்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.  மேலும், இந்த விலை வீழ்ச்சியை நுகர்வோர்களுக்கு ஒரு பின்னடைவு இல்லாமல் விரைவாக கொண்டு சேர்க்க  வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. விலை விவரங்கள் சேகரிப்பு, சமையல் எண்ணெய்கள் மீதான கட்டுப்பாட்டு ஆணை மற்றும் சமையல் எண்ணெய்களின் பேக்கேஜிங் போன்ற மற்ற விஷயங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

 

மே மாதம்  முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுடன் துறை நடத்திய கூட்டத்தில்,  ஃபார்ச்சூன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை  ரூ.220-லிருந்து ரூ. 210 –ஆகக் குறைக்கப்பட்டது. சோயாபீன் (பார்ச்சூன்) மற்றும் கச்சி கானி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை ரூ.205- லிருந்து  ரூ. 195ஆக குறைக்கப்பட்டது.  சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, எண்ணெய் விலை குறைப்பு ஏற்பட்டது. குறைக்கப்பட்ட வரியின் முழுமையான பலன் நுகர்வோருக்கு மாறாமல் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு எண்ணெய் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை வியத்தகு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, விலைகள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்தபோதிலும், உள்நாட்டு சந்தையில் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது. உலக விலை வீழ்ச்சிக்கு மத்தியில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையை குறைப்பது குறித்து ஆலோசிக்க, முன்னணி தொழில்துறை பிரதிநிதிகளுடன் உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு சமையல் எண்ணெய்களின் உலகளாவிய விலைகள் டன் ஒன்றுக்கு 300-450 அமெரிக்க டாலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், ஆனால் சில்லறை சந்தைகளில் பிரதிபலிக்க நேரம் எடுக்கும் என்றும், சில்லறை விலைகள் வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தொழில்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் சமையல் எண்ணெய் விலை மற்றும் கிடைக்கும் நிலைமையை துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் சமையல் எண்ணெய்கள் மீதான குறைக்கப்பட்ட வரி கட்டமைப்பின் பலன் மற்றும் சர்வதேச சந்தையில் தொடர்ச்சியான கணிசமான விலை வீழ்ச்சியின் பலனை உடனடியாக நுகர்வோருக்கு வழங்க வேண்டியது அவசியம். இதன் மூலம் நுகர்வோர் தங்கள் பட்ஜெட்டில் கூடுதல் பணத்தை சேமிக்க முடியும் எதிர்பார்க்கலாம்.

***************


(Release ID: 1840138) Visitor Counter : 270