புவி அறிவியல் அமைச்சகம்

சர்வதேச கடலோர தூய்மை தினத்தைக் கொண்டாடும் விதமாக தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் பிரச்சார இயக்கம்

Posted On: 02 JUL 2022 4:05PM by PIB Chennai

இந்தியா, செழுமையான கடல்சார் வரலாற்றைக் கொண்ட நாடு.   கடல்சார் நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் முதலில் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, சமுத்திரம், கடல் மற்றும் ஆறுகளுக்கிடையேயான உறவுகள் பற்றிய குறிப்புகளை, இந்திய புராணங்களிலும் காணலாம்.   இந்தியாவின் சமூக – ஆன்மீக பாரம்பரியங்கள், இலக்கியம், கவிதை, சிற்பம், ஓவியம் மற்றும் தொல்லியல் சார்ந்த பன்முக ஆதாரங்கள், இந்தியாவின் சிறப்பான கடல்சார் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக உள்ளன.  

இந்தியாவின் 7,500 கி.மீ.-க்கு அதிக நீளமுள்ள கடற்கரைப் பகுதி,  நமது வளமான கடல்வளங்களைப் பிரதிபலிக்கிறது.   இதில், இந்தியப் பெருங்கடல் மட்டும் தான், இந்தியா என்ற நாட்டின் பெயரைக்  குறிப்பிடுவதாக உள்ளது மிக முக்கியமானது.  

கடல் மற்றும் சமுத்திரங்களில் கிடைக்கும் இயற்கைச் செல்வம் மூலம், மனித சமுதாயம் தொடர்ந்து பயனடைந்து வருகிறது.   எனினும், அண்மைக் காலங்களில்,  நிலம்சார்ந்த நடவடிக்கைகள், சுற்றுலா மற்றும் மீன்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், ஆறுகள் மற்றும் பல்வேறு நீர்வழிகள் வாயிலாக கடற்கரை மற்றும் கடற்பகுதிக்குள் சென்றுவிடுகின்றன.  

இதனைத் தடுக்க, உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமை, “சர்வதேச கடலோர தூய்மை தினம்“ கொண்டாடப்படுகிறது.  

இந்தாண்டு, 17 செப்டம்பர், 2022 அன்று, மத்திய அரசு,  தன்னார்வ அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமுதாயத்துடன் இணைந்து, இந்தியாவின் கடலோரப் பகுதி முழுவதும்  “தூய்மையான கடல்,  பாதுகாப்பான கடல்“ என்ற தூய்மை இயக்கத்தை மேற்கொள்ள உள்ளது. 

மத்திய புவி அறிவியல் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, இந்திய கடலோரக் காவல்படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை, பிற சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த தூய்மை இயக்கத்தில் பங்கேற்க உள்ளன.  

இதில், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று, நேரடியாகவும், காணொலி வாயிலாகவும், கடலோரப் பகுதிகளில் குப்பை போடுவதைக் குறைப்பது,  பிளாஸ்டிக்கை குறைந்தபட்ச தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் சேகரிக்கப்படும் இடத்திலேயே பிரித்தெடுத்தல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.   

இந்த ஆண்டு, இந்தியாவின் 75-வது ஆண்டு  சுதந்திர தின அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படுவதையொட்டி,  நாடு முழுவதும் 75 கடற்கரைப் பகுதிகளில்,  3 ஜுலை, 2022 (நாளை) தொடங்கி 75 நாட்களுக்கு கடலோர தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.  அத்துடன் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான, “தூய்மையான கடல்,  பாதுகாப்பான கடல்“ என்ற இந்த பிரச்சார இயக்கம்,  “சர்வதேச கடலோர தூய்மை தினம்“ கொண்டாடப்படும் 17 செப்டம்பர், 2022 அன்று நிறைவடையும்.  

17 செப்டம்பர் 2022 அன்று கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபடுவதற்கு மக்கள் தாமாக முன்வந்து பதிவு செய்வதற்காக,  “எகோ மித்ரம்“ என்ற செல்போன் செயலி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.  

பிளாஸ்டிக் பயன்பாடு, எந்தளவிற்கு நமது கடல்சார் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் மனதில் பழக்கவழக்க மாற்றத்தை ஏற்படுத்துவதே, இந்த பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும்.      

*****



(Release ID: 1838843) Visitor Counter : 425


Read this release in: English , Urdu , Hindi , Manipuri