பிரதமர் அலுவலகம்

ஜெர்மனியில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் ‘மேம்பட்ட எதிர்காலத்திற்கு முதலீடு செய்தல்: பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்’ என்ற அமர்வில் பிரதமரின் உரை

Posted On: 27 JUN 2022 9:24PM by PIB Chennai

மேதகு பெருமக்களே,

உலக நாடுகளின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இடையே அடிப்படை மோதல் இருப்பதாக துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது. ஏழை நாடுகளும், ஏழை மக்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக மற்றொரு தவறான கருத்தும் உள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியா இந்தக்கருத்தை முற்றிலும் மறுக்கிறது. பழங்கால இந்தியா, அபரிமிதமான செழிப்பைக் கண்டுள்ளது;  அதைத்தொடர்ந்து பல ஆண்டுகள் அடிமைப் போக்கையும் நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோம்; தற்போது ஒட்டுமொத்த உலகிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரமாக சுதந்திர இந்தியா திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த உறுதிப்பாட்டை இந்தியா இம்மியளவும் விட்டுத் தரவில்லை. உலக மக்கள் தொகையில் 17% பேர் இந்தியாவில் வசிக்கிறார்கள். இருந்தபோதும் சர்வதேச கரியமிலவாயு வெளியிடுவதில் எங்களது பங்களிப்பு வெறும் 5% மட்டுமே. இயற்கையுடன் இணைந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட எங்களது வாழ்க்கைமுறையே இதற்கு முக்கிய காரணம்.

 எரிசக்தியின் அணுகல் என்பது வசதி படைத்தவர்களுக்கு கிடைத்த வரமாக இருக்கக்கூடாது, ஓர் ஏழை குடும்பத்திற்கும் எரிசக்தி மீது அதே உரிமை உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். மேலும், புவிசார்ந்த அரசியல் அழுத்தம் காரணமாக இன்று எரிசக்தி கட்டணம் வானளவு உயர்ந்துள்ள நிலையில், இந்த விஷயத்தை நினைவில் கொள்வது முக்கியமாகிறது. இந்தக் கோட்பாடைப் பின்பற்றி இந்தியாவில் எல்இடி விளக்குகள் மற்றும் சுத்தமான சமையல் எரிவாயுவை வீட்டிற்கு வீடு நாங்கள் விநியோகம் செய்து, ஏழை மக்களுக்கு எரிசக்தியை உறுதி செய்யும் அதேவேளையில், கரியமிலவாயு வெளியிடுவதை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாங்கள் உணர்த்தியுள்ளோம்.

 பருவநிலை உறுதிப்பாடுகளுக்கான எங்களது அர்ப்பணிப்பு, எங்கள் செயல்பாடுகளின் மூலம் புலனாகிறது. புதைப்படிமம் அல்லாத வளங்களிலிருந்து 40% எரிசக்தி என்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் எட்டி விட்டோம். பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கும் இலக்கு 5 மாதங்களுக்கு முன்பே எட்டப்பட்டுள்ளது. முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் இந்தியாவில் உள்ளது. இந்த தசாப்தத்தில், இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே அமைப்புமுறை கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாததாக மாறும்.

மேதகு பெருமக்களே,

இந்தியா போன்ற மாபெரும் நாடு, லட்சியத்தை முன்னிறுத்தும்போது, வளர்ந்து வரும் இதர நாடுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. ஜி7 கூட்டமைப்பைச் சேர்ந்த வளம் மிகுந்த நாடுகள் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்திற்கான மாபெரும் சந்தை இந்தியாவில் தற்போது வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் உற்பத்தியில் ஜி-7 நாடுகள் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திற்கும் இந்தியா அளிக்கும் ஆதரவு, அந்தத் தொழில்நுட்பம் ஒட்டுமொத்த உலகமும் அணுகக் கூடியதாக அதை மாற்றும். சுழற்சி பொருளாதாரத்தின் முக்கிய கோட்பாடுகள், இந்திய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன.

கடந்த ஆண்டு கிளாஸ்கோவில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற லைஃப் இயக்கத்திற்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். இந்த ஆண்டு சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தன்று, லைஃப் பிரச்சாரத்திற்கான உலகளாவிய முன்முயற்சியை நாங்கள் தொடங்கினோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதுதான் இந்தப் பிரச்சாரத்தின் இலக்காகும்.  இந்த இயக்கத்தைப் பின்பற்றுபவர்களை ட்ரிப்பிள்-பி (பூமிக்கும் மக்களுக்கும் ஆதரவளிப்பவர்கள்) என்று அழைக்கலாம். நம் சொந்த நாடுகளில் இதுபோன்ற மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தலைமுறையினருக்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இதுதான்.

மேதகு பெருமக்களே,

மனிதர்களும், பூமியின் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. எனவே தான் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம். சுகாதாரத்துறையில் மின்னணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பெருந்தொற்றின் போது, ஏராளமான புதிய வழிமுறைகளை இந்தியா கண்டறிந்தது. இந்த புதுமைகளை, வளர்ந்துவரும் இதர நாடுகளுக்கும் கொண்டு சேர்க்க ஜி-7 நாடுகள் இந்தியாவிற்கு உதவலாம். சர்வதேச யோகா தினத்தை சமீபத்தில் நாம் அனைவரும் கொண்டாடினோம். கொவிட் நெருக்கடி காலகட்டத்தின் போது, உலகம் முழுவதும் உள்ள மக்களின் சிறந்த நோய் எதிர்ப்பு கருவியாக யோகா மாறியுள்ளது, ஏராளமான மக்கள் தங்களது உடல் மற்றும் மன நலனை பேணிக்காக்க இது உதவியது.

யோகா தவிர்த்து, இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பாரம்பரிய மருத்துவம் என்ற மதிப்புமிக்க வளத்தை, முழுமையான ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தலாம். பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையத்தை இந்தியாவில் தொடங்க உலக சுகாதார அமைப்பு அண்மையில் முடிவு செய்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ஏராளமான பாரம்பரிய மருத்துவ முறைகளின் களஞ்சியமாக செயல்படுவது மட்டுமல்லாமல், இந்தத் துறையில் கூடுதல் ஆராய்ச்சிக்கும் இந்த மையம் ஊக்கமளிக்கும். உலக மக்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும்.

நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

                         **********

 



(Release ID: 1837515) Visitor Counter : 148