குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 15 JUN 2022 4:13PM by PIB Chennai

மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உலக அமைதி மிகவும் முக்கியமானது என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு, நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை” என்று கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவனத்தின் மாணவர்களுடன் கலந்துரையாடிய திரு.நாயுடு, இந்தியர்கள் தங்களது கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதுடன், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்று கூறினார்.  உலகமே ஒரே குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

உலகில் இந்தியா மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது என்று கூறிய அவர், யாராக இருந்தாலும் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் மிக உயரிய அரசியல் சாசன பதவியை அடைய முடியும் என்று கூறினார். வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்திய நாகரீகத்தின் முக்கிய பண்பு பகிர்தல் மற்றும் கவனம் செலுத்துதல் என்பதாகும் என்றார்.

எந்தவொரு மதத்தையும், மதத்தை சார்ந்த தலைவர்களையும் அவமரியாதை செய்வது, பன்மைத்தன்மை அனைவரையும் அரவணைத்தல் ஆகியவற்றில் நம்பிக்கையுடைய இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர் கூறினார்.  “எந்த மதத்துக்கு எதிராகவும் வெறுப்பு பேச்சையோ, அவதூறு கருத்துக்களையோ வெளியிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த திரு.நாயுடு,  ஜனநாயக உரிமைக்காக போராடும் போது வன்முறையைத் தூண்டுவது நாட்டு நலனுக்கு பாதகத்தை ஏற்படுத்திவிடும் என்றார்.

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து கவலை வெளியிட்ட அவர், விவாதித்து முடிவெடுத்தலே முன்னேற்றத்துக்கு வழி வகுக்குமே தவிர இடையூறு செய்வது அல்ல என்றார். ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோமா அல்லது பலவீனப்படுத்துகிறோமா என்பதை கட்சிகள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  நாடாளுமன்றங்களில் நடைபெறும் அமளிகளைப் பெரிய அளவில் வெளியிடுவதைக் கைவிட்டு, ஊடகங்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்.

தலைமைப் பண்புக்குத் தேவையான நற்பண்புகள் பற்றி மாணவர்களிடம் உரையாற்றிய அவர், பொதுவாழ்வில் ஒழுக்கத்தை கைபிடிப்பதுடன், மக்கள் நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.  சித்தாந்தத்தைவிட நல்ல நடத்தை முக்கியமானது என்று அவர் கூறினார். குழுப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கருத்துக்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் திறன், மக்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவது ஆகியவை நல்ல தலைவராக ஆவதற்கு அவசியமானது என்று தெரிவித்தார்.

 

*****


 



(Release ID: 1834278) Visitor Counter : 202