பிரதமர் அலுவலகம்
மத்திய நிதியமைச்சகம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
Posted On:
06 JUN 2022 1:20PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, திரு ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, திரு பங்கஜ் சவுத்ரி அவர்களே, திரு பகவத் கிருஷ்ணாராவ் அவர்களே, இதர பிரமுகர்களே!
இந்த விடுதலையின் அமிர்த மகோத்சவம் என்பது 75 ஆண்டுகளைக் கொண்டாடுவது மட்டுமல்ல, விடுதலைக்கான நீண்ட போராட்டத்தில் பங்கேற்று, இந்த இயக்கத்திற்கு வெவ்வேறு பரிணாமங்களைச் சேர்த்து, ஆற்றலை அதிகப்படுத்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றும், அவர்களைக் கொண்டாடும் தருணமும், இது. விடுதலையின் 75 ஆண்டுகளை நாம் கொண்டாடும் போது, நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு குடிமகனும் மனதளவில் சிறப்பான பங்களிப்பை வழங்குவது அவரவரது கடமை. ஒரு தேசமாக, பல்வேறு நிலைகளில் இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, கடந்த எட்டு ஆண்டுகளில் புதிய விஷயங்களைச் செய்யவும் முயன்றுள்ளது.
நண்பர்களே,
சுதந்திரத்திற்கு பிறகான ஏழு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தில், மக்கள் மைய ஆளுகையும், நல்ல ஆளுகையும் பிரதானமாக உள்ளன. வெவ்வேறு அமைச்சகங்களின் பல்வேறு இணைய தளங்களை நாடாமல், இந்திய அரசின் ஒரே தளத்தை அணுகி ஒருவர் தமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, சிறப்பானதாக இருக்கும். இதை கருத்தில் கொண்டுதான் இன்று ஜன் சமர்த் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடன் இணைக்கப்பட்ட இந்திய அரசின் அனைத்து திட்டங்களும் இனி வெவ்வேறு நுண் தளங்களில் அல்லாமல் ஒரே இடத்தில் இடம் பெற்றிருக்கும். சுய வேலைவாய்ப்பை அதிகரிப்பதிலும், அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதிலும் இந்தத் தளம் முக்கிய பங்கு வகிக்கும்.
நண்பர்களே,
சீர்திருத்தங்களுடன், எளிமைப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். மத்திய மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பல்வேறு வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பலன்களை நாடு உணர்ந்து வருகிறது. சீர்திருத்தம், எளிமைப்படுத்துதல், எளிதாக்குதல் ஆகிய சக்திகளோடு நாம் முன்னேறினால், புதிய வசதிகளை எட்டலாம்.
ஏதேனும் ஒரு விஷயத்தில் இந்தியா உறுதியாக இருந்தால், ஒட்டுமொத்த உலகிற்கும் அது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பதை கடந்த எட்டு ஆண்டுகளில் நாம் உணர்த்தியுள்ளோம். மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக மட்டுமல்லாமல், திறமை வாய்ந்த, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, படைப்பாற்றல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலுக்காக, நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புகளோடும் நம்மை உலகம் கூர்ந்து நோக்குகிறது.
நிதி உள்ளடக்கத்திற்காக நாம் தளங்களை ஏற்படுத்தியுள்ளோம், இனி அவற்றின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட நிதி தீர்வுகள், இதர நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வாக மாற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விடுதலையின் அமிர்த காலத்தில் நிதி மற்றும் பெருநிறுவன ஆளுகையை நீங்கள் மேலும் ஊக்கப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
மிக்க நன்றி!
பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 1831484)
(Release ID: 1831773)
Visitor Counter : 147
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam