பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில் ஏற்பாடு செய்திருந்த ‘இளைஞர் முகாம்’ நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


"ஒவ்வொரு தலைமுறையிலும் நிலையான குணநலன்களை உருவாக்குவது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படை"

"எங்கெல்லாம் சவால்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது, எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ, இந்தியா தீர்வுகளுடன் வருகிறது"

"இந்தியா இன்றைய உலகின் புதிய நம்பிக்கை"

"மென்பொருளில் இருந்து விண்வெளி வரை, புதிய எதிர்காலத்திற்கு தயாராகும் நாடாக நாங்கள் உருவாகி வருகிறோம்"

"நாம் நம்மை உயர்த்திக் கொள்வோம், ஆனால் நமது உயர்வு மற்றவர்களின் நலனுக்கான ஊடகமாகவும் இருக்க வேண்டும்"

காசிமலையை சுத்தம் செய்யும் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ஒரு நாகாலாந்து சிறுமி பற்றி குறிப்பிடுகிறார்

Posted On: 19 MAY 2022 12:06PM by PIB Chennai

வதோதராவின் கரேலிபாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இளைஞர் முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். குண்டால்தம் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில், வதோதராவின் கரோலிபாக் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில் ஆகியவை இந்த முகாமுக்கு  ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு தலைமுறையிலும் நிலையான குணநலன்களை உருவாக்குவதே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படை என்பதை நமது வேதம் நமக்குக் கற்பித்துள்ளது என்றார். இன்று நடத்தப்படும் முகாம், இளைஞர்களிடையே நல்லெண்ணங்களை  உருவாக்குவதற்கான முயற்சி மட்டுமல்லாமல், சமூகம், அடையாளம், பெருமை மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான ஒரு புனிதமான மற்றும் இயற்கையான பிரச்சாரமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டுத் தீர்மானத்தை எடுத்து முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தினார். புதிய அடையாளத்தை கொண்ட முன்னேற்றமான பழமையான பாரம்பரியத்தை கொண்டதாக  புதிய இந்தியா திகழ்கிறது. "எங்கெல்லாம் சவால்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது, எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்தியா தீர்வுகளுடன் வெளிவருகிறது" என்று பிரதமர் கூறினார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உலகிற்கு வழங்குவதில் இருந்து, உலகளாவிய அமைதியின்மை மற்றும் மோதல்களுக்கு மத்தியில் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்த நிலையில், தன்னிறைவு இந்தியா என்ற நம்பிக்கையுடன்  அமைதிக்கான திறமையான பங்களிப்பை  இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவே இன்றைய உலகின் புதிய நம்பிக்கை ஆகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் யோகாவின் பாதையை நாங்கள் காட்டுகிறோம், ஆயுர்வேதத்தின் சக்தியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, மக்களின் பங்கேற்பு அதிகரிப்புடன், அரசாங்கத்தின் பணி முறையும் சமூகத்தின் சிந்தனையும் மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் அமைப்பைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் இளைஞர்களால் வழிநடத்தப்படுகிறது. "மென்பொருளில் இருந்து விண்வெளியில், புதிய எதிர்காலத்திற்கு தயாராகும் நாடாக நாங்கள் உருவாகி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை, சன்ஸ்கார் என்றால் கல்வி, சேவை மற்றும் உணர்திறன்! நம்மைப் பொறுத்தவரை, சன்ஸ்கார் என்றால் அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு மற்றும் வலிமை! நம்மை நாமே உயர்த்திக் கொள்வோம், ஆனால் நம் உயர்வு பிறர் நலனுக்கான ஊடகமாகவும் இருக்க வேண்டும்! வெற்றியின் உச்சத்தை நாம் தொடுவோம், ஆனால் நமது வெற்றி அனைவருக்கும் சேவை செய்யும் கருவியாக இருக்க வேண்டும். பகவான் சுவாமிநாராயணனின் போதனைகளின் சாராம்சம் இதுதான், இந்தியாவின் இயல்பும் இதுதான்” என்று பிரதமர் கூறினார்.

 வதோதராவுடனான தமது நீண்ட தொடர்பை நினைவுகூர்ந்த பிரதமர், தமது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்வில் அந்த இடத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். 'ஒற்றுமை சிலை' மூலம் வதோதரா உலகளாவிய ஈர்ப்புக்கு ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது. இதேபோல், பாவகத் கோயிலும் பல இடங்களில் இருந்து மக்களை கவர்ந்து வருகிறது. வதோதராவில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகள் உலகளவில் பயன்படுத்தப்படுவதால், ‘சன்ஸ்கார் நாக்ரி’ வதோதரா உலகம் முழுவதும் அறியப்பட்டு வருகிறது, அதுவே வதோதராவின் பலம் என்று பிரதமர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் நாட்டுக்காக உயிர் துறக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், நாட்டுக்காக வாழ முடியும் என்று பிரதமர் கூறினார். “ஆகஸ்ட் 15, 2023 வரை, பண பரிவர்த்தனைகளை நிறுத்திவிட்டு டிஜிட்டல் பேமெண்ட்டுகளை பின்பற்றலாமா” என்று அவர் வினவினார். உங்கள் சிறிய பங்களிப்பு சிறு வணிகங்கள் மற்றும் விற்பனையாளர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். அதேபோல, தூய்மை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

காசி மலையைத் தூய்மைப்படுத்துவது தொடர்பான நாகாலாந்து சிறுமியின் பிரச்சாரத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். அவள் தனியாகத் தொடங்கினாள், ஆனால் தற்போது நிறைய பேர் சேர்ந்துள்ளனர். இது உறுதிப்பாட்டின் தீர்க்க சக்தியை விளக்குகிறது. அதேபோல், மின்சாரத்தை மிச்சப்படுத்துவது அல்லது இயற்கை விவசாயத்தை பின்பற்றுவது போன்ற சிறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டுக்கு உதவுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

***************


(Release ID: 1826741) Visitor Counter : 164