நிலக்கரி அமைச்சகம்
அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியின் இறக்குமதியை குறைப்பதும் இந்தத் துறையில் நாட்டில் தற்சார்பை உருவாக்குவதும் நிலக்கரி அமைச்சகத்தின் இலக்கு: மத்திய நிலக்கரித்துறை அமைச்சர்
Posted On:
06 MAY 2022 4:06PM by PIB Chennai
உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க அமைப்பான இந்திய நிலக்கரி நிறுவனம் மூடப்பட்ட அல்லது நிலக்கரி எடுப்பதைத் தொடராத 20 நிலக்கரி சுரங்கங்களை தனியார் துறைக்கு அளிக்கவும், அவற்றை மீண்டும் திறந்து வருவாய் பகிர்வு மாதிரியில் உற்பத்தியைக் கொண்டுவரவும், முன்வந்துள்ளது.
மும்பையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் தனியார் துறையினருக்கு இது குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியின் இறக்குமதியை குறைப்பதும் இந்தத் துறையில் நாட்டில் தற்சார்பை உருவாக்குவதும் நிலக்கரி அமைச்சகத்தின் இலக்கு என்றார்.
மூடப்பட்ட அல்லது நிலக்கரி எடுப்பதைத் தொடராத நிலக்கரி சுரங்கங்களில் சுமார் 380 மில்லியன் டன் நிலக்கரி இருப்பதாகவும், இதிலிருந்து 30-40 மில்லியன் டன் நிலக்கரியை எளிதாக எடுக்கலாம் என்றும் அவர் கூறினார். சுரங்கப் பணிகளை தொடர்வது அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதை அதிகரிக்கவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் திரு ராவ் சாஹேப் பாட்டீல் தன்வே, நிலக்கரி இருப்பை பெருமளவில் கொண்டிருப்பதில் உலகில் 5-வது நாடாக இந்தியா விளங்குகிறது என்றார். நிதியாண்டு 2023-24-க்குள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை 1.2 பில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்துவது அரசின் நோக்கம் என்றும் கூறினார்.
நிலக்கரி அமைச்சகம் தயாரித்த “நிலக்கரி துறைக்கான தொழில்நுட்ப செயல் திட்டத்தை” திரு ஜோஷியும், திரு தன்வேயும் வெளியிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நிலக்கரித்துறை செயலாளர் டாக்டர் அனில்குமார் ஜெயின், இந்திய நிலக்கரி நிறுவன தலைவர் திரு பிரமோத் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823245
-----
(Release ID: 1823314)
Visitor Counter : 269