பிரதமர் அலுவலகம்
பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டில் பிரதமர் துவக்க உரை வழங்கினார்
“ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம்”
“எந்த ஒரு உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயணத்திலும் மக்கள்தான் மையமாக இருக்கவேண்டும். அதை தான் இந்தியாவில் நாங்கள் செய்கிறோம்”
“உள்கட்டமைப்பை நெகிழ்திறன் வாய்ந்ததாக நாம் மாற்றினால், நமக்காக மட்டுமல்லாமல், பல எதிர்கால தலைமுறையினருக்கும் பேரிடர்களை நாம் தடுக்கலாம்”
Posted On:
04 MAY 2022 6:08PM by PIB Chennai
பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று துவக்க உரையாற்றினார். ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு ஸ்காட் மாரிசன், கானா அதிபர் மாண்புமிகு நானா அட்டோ டன்க்வா அகுஃபோ-அட்டோ, ஜப்பான் பிரதமர் மாண்புமிகு ஃப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் மாண்புமிகு ஆண்ட்ரி நாரினா ரஜோலினா ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்.
ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதே நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளார்ந்த நோக்கம் என்று நிகழ்ச்சியில் குழுமியிருந்தவர்களுக்கு பிரதமர் திரு மோடி நினைவுபடுத்தினார். “அதனால்தான் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம்”, என்று அவர் தெரிவித்தார். மக்கள் சார்ந்ததும், அவர்களுக்கு உயர்தரமான, நம்பகத்தன்மையான, நிலையான சேவைகளை, நடுநிலை வழியில் வழங்குவதும்தான் உள்கட்டமைப்பு என்று பிரதமர் கூறினார். “எந்த ஒரு உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயணத்திலும் மக்கள்தான் மையமாக இருக்கவேண்டும். அதை தான் இந்தியாவில் நாங்கள் செய்கிறோம்”, என்றார் அவர்.
கல்வி, சுகாதாரம், குடிநீர், துப்புரவு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமான துறைகளில் அடிப்படை சேவை வசதிகளை இந்தியா அதிகரித்து வருவதால், “பருவநிலை மாற்றத்தையும் மிக நேரடியான வழியில் நாங்கள் எதிர்கொள்கிறோம். அதனால் தான் எங்களது வளர்ச்சித் திட்டங்களுக்கு இணையாக, 2070-ஆம் ஆண்டுக்குள் ‘நிகர பூஜ்ஜிய’ இலக்கை எட்ட காப்-26 இல் நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்”, என்று பிரதமர் கூறினார்.
மனித ஆற்றலை வெளிக்கொணர்வதில் உள்கட்டமைப்பின் முக்கியத்துவம் பற்றி பேசிய பிரதமர், உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பல தலைமுறைகளையும் பாதிக்கும் என்று தெரிவித்தார். இது குறித்து பேசுகையில், “நம்மிடையே நவீன தொழில்நுட்பங்களும், அறிவும் இருக்கும் வேளையில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் நெகிழ்திறன் உள்கட்டமைப்பை நம்மால் உருவாக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இந்த சவாலுக்கான அங்கிகாரம், பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் (சி.டி.ஆர்.ஐ) உருவாக்கத்திற்கு அடிகோலுகிறது, என்று அவர் கூறினார். கூட்டணி, விரிவுபடுத்தப்பட்டிருப்பதுடன், மதிப்புமிக்க பங்களிப்புகளையும் வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். காப்-26 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நெகிழ்திறன் தீவு நாடுகளுக்கான உள்கட்டமைப்பு’ என்ற முன்முயற்சி பற்றியும், சி.டி.ஆர்.ஐ.- இன் உலகம் முழுவதும் 150 விமான நிலையங்கள் குறித்த நெகிழ்திறன் விமான நிலையங்கள் ஆய்வுப் பணிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். சி.டி.ஆர்.ஐ- ஆல் வழிநடத்தப்படும் ‘பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு அமைப்பு முறைகளின் சர்வதேச மதிப்பீடு’, பெரும் மதிப்புமிக்க சர்வதேச அறிவை உருவாக்க உதவும் என்று திரு மோடி கூறினார்.
நமது எதிர்காலத்தை நெகிழ்திறன் வாய்ந்ததாக மாற்றுவதற்கு ‘நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாற்றத்தை’ நோக்கி நாம் செயல்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நமது பரவலான நடவடிக்கைகளுள் நெகிழ்திறன் உள்கட்டமைப்பும் மையப் பொருளாக செயல்படலாம். “உள்கட்டமைப்பை நெகிழ்திறன் வாய்ந்ததாக நாம் மாற்றினால், நமக்காக மட்டுமல்லாமல், பல எதிர்கால தலைமுறையினருக்கும் பேரிடர்களை நாம் தடுக்கலாம்”, என்று அவர் மேலும் கூறினார்
***************
(Release ID: 1822701)
Visitor Counter : 168