இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

படுகோனே - டிராவிட் உயர்சிறப்பு விளையாட்டு மையத்தில் உள்ள அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி, சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான கூடுதல் திறனை உருவாக்கிக் கொள்ள திரு.அனுராக் தாக்கூர் வேண்டுகோள்

Posted On: 03 MAY 2022 4:37PM by PIB Chennai

விளையாடுவதற்காக, யாரும் வார இறுதி நாட்களுக்காகவோ, விடுமுறை தினத்திற்காகவோ காத்திருக்கத் தேவையில்லை என்றும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விளையாடத் தொடங்குமாறும், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.   படுகோனே-டிராவிட் உயர்சிறப்பு விளையாட்டு மையத்தில், விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், சர்வதேச அளவில் போட்டியிடுவதற்குத் தேவையான கூடுதல் திறனை உருவாக்கிக் கொள்ள ஏதுவாக, இந்த மையத்தில் உள்ள அதிநவீன வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.  

படுகோனே – டிராவிட் உயர்சிறப்பு விளையாட்டு மையம், பெங்களூருவில் 15 ஏக்கர் பரப்பளவில், உலகத்தரத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஆகும்.   இந்த உயர்சிறப்பு விளையாட்டு மையத்தில், பேட்மின்டன், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், நீச்சல், ஸ்குவாஷ், கூடைப்பந்து, துப்பாக்கிசுடும் பயிற்சி போன்றவை வழங்கப்படுகிறது.   போட்டித்தன்மை மற்றும் பொழுதுபோக்குக்காக வரும் விளையாட்டு வீரர்கள், தொழில் ரீதியான பயிற்சியாளர்கள், விளையாட்டுக் கல்வியாளர்கள் மற்றும் வளரும் இளம் திறமைசாலிகளை, அவர்களது விருப்பத்திற்கேற்ப சிறந்து விளங்கச் செய்யும் வகையில் இந்த மையம் ஊக்குவிக்கிறது.    இந்த மையம், பேட்மின்டன் மற்றும் நீச்சல் பயிற்சிக்கான தேசிய உயர் சிறப்பு மையமாக,  இந்திய விளையாட்டு ஆணையத்தால் அன்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

உயர்சிறப்பு விளையாட்டு மையத்தில் உள்ள பயிற்சி நிறுவனங்கள், அடித்தட்டு அளவிலான திட்டங்களை ஊக்குவித்து, விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்கும் அதே நேரத்தில், எதிர்காலத்தில் சர்வேதேச அளவில் தலைசிறந்த வீரர்களை உருவாக்கும் நோக்கிலும் செயல்படுகிறது.  லக் ஷயாசென், ஸ்ரீஹரி நடராஜ், அஸ்வினி பொன்னப்பா மற்றும் அபூர்வி சான்டெலி போன்ற இந்தியாவின் மிகவும் திறமைவாய்ந்த மற்றும் வெற்றிகரமான விளையாட்டு வீரர்-வீராங்கனைகளையும் இந்த மையம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. 

துரோணாச்சார்யா விருதுபெற்ற விமல் குமார்(பிரகாஷ் படுகோனே பேட்மின்டன் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளர்) மற்றும் நிஹார் அமீன் (டால்பின் நீர்விளையாட்டு மைய தலைமைப் பயிற்சியாளர்) போன்ற மிகச்சிறந்த பயிற்சியாளர்களால் நடத்தப்படும் சில மிகவும் வெற்றிகரமான மற்றும் பிரபலமான விளையாட்டுப் பயிற்சி மையங்களுக்கும், உயர்சிறப்பு விளையாட்டு மையம் தாயகமாகத் திகழ்கிறது. 

ஒரு விளையாட்டு வீரரின் பயணத்தில் முக்கிய அம்சம் யாதெனில், விளையாட்டு அறிவியல் வாயிலாக, உலக அரங்கில் திறமையை வெளிப்படுத்தத் தேவையான ஆதரவு ஆகும்.   இந்த உயர்சிறப்பு விளையாட்டு மையத்தில், அபினவ் பிந்த்ரா இலக்கு செயல்பாட்டு மையம்,  வெசோமா விளையாட்டு மருத்துவ மையம் மற்றம் சமிக்சா உளவியல்மையம் போன்றவை, நமது விளையாட்டு வீரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான  பிசியோதெரபி சிகிச்சை, காய மறுவாழ்வு, நீர்சிகிச்சை, முதியோர் பராமரிப்பு, விளையாட்டு ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு உளவியல் போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. 

அபினவ் பிந்த்ரா இலக்கு செயல்பாட்டு மையம்( ) என்ற துப்பாக்கிசுடும் பயிற்சி மையம்,  ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியரான அபினவ் பிந்த்ராவால் தொடங்கப்பட்டது.   வெற்றி வாய்ப்புள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக வருவோரின் திறமையை மதிப்பீடு செய்து, அவர்களுக்கேற்ற பயிற்சிக்குத் தேவையான பைலேட் அறை மற்றும் கிரையோதெரபி பிரிவு உள்ளிட்ட அதிநவீன சாதனங்கள் இந்த மையத்தில் இருப்பது பெருமிதம் அளிக்கக் கூடியது ஆகும்.  

இந்த மையத்தில், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.   அவரவர் விருப்பத்திற்கேற்ற விளையாட்டில் பயிற்சிபெறவும்,  முழுமையாக செயல்படும் உடல்தகுதி மையம் மற்றும் தி கிராண்ட்ஸ்டான்டு எனப்படும் கிளப்ஹவுஸ் போன்ற வசதிகளும், இந்த வளாகத்தில் உள்ளன. 

அமைச்சரின் இந்த ஆய்வின்போது, கிரிக்கெட் வீரர் திரு.ராகுல் டிராவிட், படுகோனே-டிராவிட் உயர்சிறப்பு விளையாட்டு மையத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.விவேக் குமார்,  மற்றும் இந்த மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.  

*****



(Release ID: 1822414) Visitor Counter : 175