ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நாட்டில் இருப்பில் உள்ள உரங்களின் இருப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் ஆய்வு

உரங்களின் இருப்பு குறித்து குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என மத்திய உரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

Posted On: 02 MAY 2022 6:01PM by PIB Chennai

நாட்டில் இருப்பில் உள்ள உரங்களின் இருப்பு குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியத் தொகையாக ரூ. 60939.23 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆய்வில் பேசிய மத்திய உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, அரசின் சிறப்பான நடவடிக்கை காரணமாக, இந்த கரீப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தேவைக்கு அதிகமாகவே உள்ளன என்றும், உரங்களின் இருப்பு குறித்து விவசாயிகளுக்கு தேவையான, சரியான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.

உரங்களை பதுக்கி வைத்தல், கள்ளச் சந்தையில் விற்றல் ஆகிய சட்ட விரோதச் செயல்களைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், இந்தச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், உரச்சந்தைகளில் சமீபத்திய நிலை, மாற்று உரங்கள், இயற்கை விவசாயம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு அந்தந்த மாநிலங்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், டி ஏ பி உரங்களுக்கான மானியத்தை 50 சதவீதம் உயர்த்தி ஒரு பைக்கு ரூ. 2501 வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இதன்மூலம் குறைவான விலையில் விவசாயிகள் உரங்களைப் பெற முடியும் என தெரிவித்தார்.

தேவைக்கேற்ப மாநிலங்களுக்குள் உர இயக்கத்தின் நுண்ணிய திட்டமிடலை மேற்கொள்ளவும், உரங்களை அனைத்து பகுதிகளிலும் இருப்பு வைக்க கூட்டுறவு சங்கங்களை பயன்படுத்திக் கொள்ளவும் மண்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திரசிங் தோமர், விவசாயத்தை ஊக்குவிக்க உறுதி பூண்டுள்ளதாகவும், கிசான் அட்டை (வேளாண் அட்டை), பயிர்க் காப்பீட்டுத் திட்டம், தோட்டக்கலை ஆகியவற்றை வலுப்படுத்த எப்போதும் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். விவசாயத் துறையில் முன்னோடியாக உள்ள நாம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் குறைந்த விலையில் உரங்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதில் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,

மேலும், விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து, வேளான் துறையில் சுய சார்பை நோக்கி உழைக்க வேண்டும் எனவும், விவசாயிகளின் நலனுக்காக புதிய முயற்சிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், உரங்கள் துறை செயலர் திரு. ஆர். கே. சதுர்வேதி உரங்களின் இருப்பு நிலை குறித்தும்  விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822064

 

 

***************



(Release ID: 1822099) Visitor Counter : 181