ஆயுஷ்

அஸ்ஸாமின் சிவசாகரில், சர்வதேச யோகா தினத்தின் 50 நாள் கவுண்டவுனை குறிக்கும் விதமாக நடைபெற்ற யோகா திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Posted On: 02 MAY 2022 2:43PM by PIB Chennai

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன், பிரசித்தி பெற்ற இடமான சிவசாகரில் உள்ள ஷிவ் டோலில், சர்வதேச யோகா தினம் 2022-ன் 50 நாள் கவுண்டவுனை குறிக்கும் விதமாக இன்று யோகா திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த திருவிழாவில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த யோகா ஆர்வலர்கள் 10,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தோரா டோல், ருத்ரசாகர் டோல், ரோங்கார், தோலாடோல் கர்,  கரேங் கர் & ஜாய்டோல் உள்பட சிவசாகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் இத்திருவிழா நடைபெற்றது. யோகாவின் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் மனித வாழ்க்கையை வளப்படுத்துவதற்கான அதன் வல்லமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

 ‘யோகாவை உங்களது வாழ்க்கையின் ஓர் அங்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என்ற மையக்கருத்தை கொண்டு நடத்தப்பட்ட இத்திருவிழாவில், அஸ்ஸாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா; மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் & நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்; ஆயுஷ் மற்றும் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய் கலுபாய், பெட்ரோலியம் &இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி மற்றும் அஸ்ஸாம் சுகாதாரத்துறை அமைச்சர் கேசப் மகந்தா, சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எம் கே சர்மா, அருணாச்சலப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோ லிபாங்க், நாகாலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் எஸ் பாங்க்னியூ போம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய துறைமுகங்கள், கப்பல் & நீர்வழி மற்றும் ஆயுஷ்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், ஆயிரக்கணக்கான ஆண்டு பெருமையுடைய நமது நாகரீகம், நமக்கு அளித்துள்ள மாபெரும் கொடையான யோகா பயிற்சியை மக்கள் மேற்கொள்வதை ஊக்குவிப்பதே இந்த விழாவின் நோக்கம் என்றார். அழகான சிவசாகர் நகரில் உள்ள இந்த புண்ணிய பூமியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சியை மேற்கொள்வது, அசாமில் உள்ள பிரசித்தி பெற்ற பாரம்பரிய தளங்களை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறச் செய்வதற்கான தொடர் முயற்சியை இந்த நிகழ்ச்சி வலியுறுத்துகிறது. நமது மனது மற்றும் ஆரோக்கியத்தை வளப்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுவதோடு, நமது சமூக- கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821993

***************



(Release ID: 1822006) Visitor Counter : 173