குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சுகாதார முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு
Posted On:
28 APR 2022 1:56PM by PIB Chennai
சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வளம், ஆரோக்கியம் மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் நேரத்தையும், வளங்களையும் சுகாதாரப் பாதுகாப்பில் முழுமையாகச் செலவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை மற்றும் சென்னை குளோபல் ஹாஸ்பிடல்ஸ் ஆகியவை இணைந்து நெல்லூரில் இன்று ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவை, நாட்டில் தொற்று அல்லாத நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டார். ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள் உடல் தகுதி மற்றும் மன விழிப்புணர்வை பராமரிக்க வழக்கமான உடல் செயல்பாடுகளுடன் யோகா போன்ற உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றம், பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சிகள் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திரு நாயுடு கூறினார். இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
இளைஞர்களிடையே உள்ள ‘துரித உணவுக் கலாச்சாரம்’ பற்றிக் குறிப்பிட்ட அவர், பாரம்பரியமாக சமைத்த, சத்தான உணவை உட்கொள்ள அறிவுறுத்தினார், மேலும் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கையுடன் சிறிது நேரம் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர், போதைப்பொருட்களை பயன்பத்துவதால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலும் அகற்ற அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820897
*****
(Release ID: 1820963)
Visitor Counter : 164