பாதுகாப்பு அமைச்சகம்
‘இந்தியாவில் உற்பத்தி, உலகத்திற்கான உற்பத்தி’ என்பதை அடைவதற்கு கூட்டாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து பராமரிப்பை மேற்கொள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
21 APR 2022 12:50PM by PIB Chennai
இந்தியாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை முன்முயற்சிகளை அமெரிக்க நிறுவனங்கள் சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ் நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ‘இந்தியாவில் உற்பத்தி, உலகத்திற்கான உற்பத்தி’ என்பதை அடைவதற்கு கூட்டாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து பராமரிப்பை மேற்கொள்ளவும், அமெரிக்க நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உறுப்பினர்களில் 30-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் 2022 ஏப்ரல் 21 அன்று காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றினார். இந்தியாவில் கூட்டான உற்பத்தி, கூட்டான மேம்பாடு, முதலீட்டு ஊக்குவிப்பு, பராமரிப்பு, பழுதுபார்ப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான ஆதாரமாக இருப்பது இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதிக்கும் பங்களிப்பு செய்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 2.5 பில்லியன் அமெரி்க்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த காலகட்டத்தின் மொத்த ஏற்றுமதியில் இது 35 சதவீதம் என்றும் அவர் கூறினார். கூட்டான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இந்தியாவின் அரசு மற்றும் தனியார் துறைகளுடன் தொழில் சார்ந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் அமெரிக்க நிறுவனங்கள் பங்கேற்பது தற்சார்பு இந்தியாவின் வெற்றிக்கும், அமெரிக்கா – இந்தியா உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாகும் என்று திரு.ராஜ் நாத் சிங் கூறினார்.
பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தியா – அமெரிக்கா ஒத்துழைப்பின் தூண்களான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது அவசியம் என்பதை பாதுகாப்பு அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். இந்தியா – அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவுகள் 21 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க வணிக உறவுகளில் ஒன்றாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தக செயல்பாடுகள் மீட்சியடைந்து ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு 113 பில்லியனை கடந்தது. வரலாற்றில் முதன் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை 1992-ல் உருவாக்கப்பட்டதாகும். இதில் 400-க்கும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் முதன்மையான நோக்கங்களாக செயல்பாடுகளை அதிகரிப்பது, அமெரிக்க நிறுவனங்கள் மூலம் முதலீட்டை அதிகப்படுத்துவது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது ஆகியவை உள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818622
***************
(Release ID: 1818684)
Visitor Counter : 253