பிரதமர் அலுவலகம்

ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 APR 2022 7:41PM by PIB Chennai

வணக்கம்!!

மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜூக்நாத் அவர்களே,

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ்  அவர்களே,

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே,

எனது அமைச்சரவை சகாக்களான திரு சர்பானந்தா சோனாவால் அவர்களே,

டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களே,

திரு முஞ்ச்பாரா மகேந்திர பாய் அவர்களே,

மற்றும் இங்குள்ள பிரமுகர்களே,

பெரியோர்களே, தாய்மார்களே!

இன்று உலகம் முழுவதும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான பிரமாண்டமான நிகழ்வை நாம் அனைவரும் காண்கிறோம்.  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ்  அவர்களுக்கு, நான் மிகவும் நன்றி தெரிவிக்கிறேன்.  இந்தியாவை புகழ்ந்துரைத்த அவரின் வார்த்தைகளுக்காக அனைத்து இந்தியர்கள் சார்பில் டாக்டர் டெட்ராஸூக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.  குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் அவரது உரை அமைந்திருந்ததற்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.  இது இந்தியர்கள் அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளது.

“இது என்னுடைய குழந்தை, இதை நான் உங்களிடம் அளிக்கிறேன்.  இதனை வளர்ப்பது உங்களின் பொறுப்பு” என்று  இந்த மையம் குறித்து டாக்டர் டெட்ராஸ் என்னிடம் கூறினார்.  இந்தியாவிடம் நீங்கள் நம்பிக்கையுடன் தந்துள்ள பொறுப்பை மிகுந்த ஆர்வத்துடன் எங்களின் முதலமைச்சர் பூபேந்திர பாய் பட்டேல், தமது தோள்களில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  எனவே, உங்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும் என நான் அவருக்கு உறுதி அளிக்கிறேன். 

எனதருமை நண்பரும், மொரீசியஸ் பிரதமருமான திரு ஜூக்நாத் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது குடும்பத்துடன் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக  நான் நட்பு கொண்டிருக்கிறேன்.  நான் மொரீசியஸ் செல்லும் போதெல்லாம் அவரது இல்லத்திற்கு சென்று அவரது தந்தையை பார்த்தேன்.  இன்று எனது அழைப்பை ஏற்று எனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு அவர் வருகை தந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகியவற்றின் பிரதமர்களின் கருத்துக்களை சற்றுநேரத்திற்கு முன் நாம் கேட்டோம்.  பாரம்பரிய மருந்துக்கான  உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்களே,

ஆயுர்வேதத்தில் அமிர்தகலசம் என்பது மிகவும் முக்கியமானது.  இந்த நிகழ்ச்சியும் அமிர்தகாலத்தில் தொடங்கியுள்ளது.  எனவே புதிய நம்பிக்கையுடன் மிகவும் பயன்தரும் விளைவுகளை நான் மனக்கண்ணால் காண்கிறேன். 

இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறை சிகிச்சையோடு நிற்பதில்லை, அது வாழ்க்கையின் ஒட்டுமொத்த அறிவியலாகும் என்றார்.  சிகிச்சை மற்றும் குணப்படுத்துதலுக்கு அப்பால் ஆயுர்வேதம் என்பது சமூக ஆரோக்கியம், மனநலம், மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் ஆரோக்கியம், இரக்கம், கருணை, இனப்பெருக்கம் போன்றவற்றையும் உள்ளடக்கியது.

ஆயுர்வேதம் என்பது ஐந்தாவது வேதமாக கருதப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் ஜாம் நகரில் உலகின் முதலாவது ஆயுர்வேத பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. ஆயுர்வேதத்தில் தரமான கல்வி நிறுவனத்தையும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் கொண்டிருப்பது ஜாம் நகர்.

நண்பர்களே,

நமது பாரம்பரியத்தில் ஒருவரை நூறாண்டுகள் வாழ்க என்று கூறுவது  வழக்கமானது.  ஏனெனில், கடந்த காலத்தில் 100 ஆண்டுகள் வாழ்வது பெரிய விஷயமல்ல, இதில் நமது பாரம்பரிய  மருத்துவ முறைகள் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. 

நண்பர்களே,

நவீன உலகத்தின் புதிய நோய்களை குணப்படுத்துவதற்கு நமது பாரம்பரிய மருத்துவ முறை முக்கியமானது.  உதாரணத்திற்கு நல்ல ஆரோக்கியம் என்பதற்கு, சமச்சீரான உணவு பழக்கம் நேரடியாக தொடர்புடையது.  இத்தகைய உணவு நோயை பாதியளவு குணப்படுத்தி விடும் என்று நமது மூதாதையர்கள் நம்பினார்கள்.  இந்த அடிப்படையில் அவர்கள் 100 ஆண்டுகள் நிறைவு செய்தார்கள். 

சிறுதானியங்களை அல்லது மோட்டா ரக தானியங்களை பயன்படுத்த நமது மூத்தவர்கள் வலியுறுத்தினர்.  இந்த பழக்கம் காலப்போக்கில் குறைந்து விட்டது.  இருப்பினும், சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு என அறிவித்திருப்பது மனித குலத்திற்கு மிகவும் பயனளிக்கும் நடைமுறையாகும். 

நண்பர்களே,

உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவிலான இந்த மையம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  இந்த நிகழ்ச்சிக்கு புகழ் சேர்க்கும் விதமாக தங்களின் நேரத்தை ஒதுக்கி இருக்கும் இரண்டு விருந்தினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

வணக்கம்.

*****



(Release ID: 1818410) Visitor Counter : 164