பாதுகாப்பு அமைச்சகம்
விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங்கிற்கு இந்திய விமானப்படை அஞ்சலி
Posted On:
15 APR 2022 10:44AM by PIB Chennai
இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற போர்வீரர், மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங்கிற்கு அவரது 103-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய விமானப்படை இன்று அஞ்சலி செலுத்தியது. நாட்டுக்கும் இந்திய விமானப்படைக்கும் மார்ஷல் ஆற்றிய பங்களிப்பு இன்று நினைவு கூரப்பட்டது.
மார்ஷல் அர்ஜன் சிங் 15 ஏப்ரல் 1919 அன்று லயால்பூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்) பிறந்தார். 19 வயதில் கிரான்வெல்லில் உள்ள ஆர் ஏ எஃப் கல்லூரியில் பயிற்சிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 1939-ல் ராயல் விமானப்படையில் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரின் போது அவரது சிறந்த தலைமைத்துவம், சிறந்த திறமை மற்றும் தைரியம் ஆகியவற்றிற்காக சிறப்புமிக்க பறக்கும் கிராஸ் அவருக்கு வழங்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தில்லியில் உள்ள செங்கோட்டையின் மீது நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய விமானப்படை விமானங்களை ஓட்டிச் சென்றதில் அவருக்குத் தனிச்சிறப்பு கிடைத்தது. 1 ஆகஸ்ட் 1964 அன்று தனது 44-வது வயதில் விமானப்படைத் தளபதியாக அர்ஜன் சிங் பொறுப்பேற்றார்.
1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆபரேஷன் கிராண்ட்ஸ்லாமை பாகிஸ்தான் தொடங்கியபோது தேசத்திற்கு சோதனையான நேரம் வந்தது. விமான உதவிக்கான கோரிக்கையுடன் பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்திற்கு அர்ஜன் சிங் வரவழைக்கப்பட்டு, நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப்படை எவ்வளவு விரைவாகத் தயாராகும் என்று கேட்டபோது, ".ஒரு மணி நேரத்தில்" என்று பதில் வந்தது. உண்மையில், இந்திய விமானப்படை வெறும் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தானின் தாக்குதலை தீரமுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்றது.
1965 போரின் போது அவரது தலைமைத்துவத்திற்காக அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் முதல் ஏர் சீஃப் மார்ஷல் அர்ஜன் சிங் ஆவார். ஜூலை 1969-ல் ஓய்வு பெற்ற பிறகும் இந்திய விமானப் படையின் மேம்பாடு மற்றும் நலனுக்கான மகத்தான பங்களிப்பை அவர் தொடர்ந்தார்.
1971 முதல் 1974 வரை சுவிட்சர்லாந்து, ஹோலி சீ மற்றும் லிச்சென்ஸ்டைன் தூதராக தேசத்திற்கான தனது சேவையை அவர் தொடர்ந்தார், அதைத் தொடர்ந்து 1974 முதல் 1977 வரை நைரோபியில் கென்யாவிற்கான இந்திய தூதரகத்திற்கு அவர் தலைமை வகித்தார். இந்திய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினராக 1978 முதல் 1981 வரையும், 1989 முதல் 1990 வரை தில்லியின் துணைநிலை ஆளுநராகவும் இருந்தார்.
அவரது சேவைகளைப் பாராட்டி, விமானப்படையின் மார்ஷல் பதவியை 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அரசு அர்ஜன் சிங்கிற்கு வழங்கியது. இந்திய விமானப்படையின் முதல் ஐந்து நட்சத்திர அதிகாரியாகவும் அவ்ர் திகழ்ந்தார். விமானப் படைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில், பனகர் விமானப்படை நிலையத்திற்கு அவரது பெயர் 2016-ம் ஆண்டு சூட்டப்பட்டது.
அவரது ஆற்றல்மிக்க ஆளுமை, பணித்திறன், தலைமைத்துவம் மற்றும் யுக்தி சார்ந்த பார்வை ஆகியவை இந்திய விமானப்படையின் அடையாளமாகத் அவரை திகழச் செய்கின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816949
-----
(Release ID: 1817029)
Visitor Counter : 194