வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஆஸ்திரேலியாவுடனும் ஐக்கிய அரபு எமிரேட்டுடனும் கையெழுத்தாகியுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய ஜவுளித்துறைக்கு அளவற்ற வாய்ப்புகளை அளிக்கும்-திரு பியூஷ் கோயல்
Posted On:
12 APR 2022 1:43PM by PIB Chennai
ஆஸ்திரேலியாவுடனும் ஐக்கிய அரபு எமிரேட்டுடனும் கையெழுத்தாகியுள்ள புதிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் ஜவுளி, கைத்தறி, காலணிகள் போன்ற , துறைகளுக்கு அளவற்ற வாய்ப்புகளை அளிக்கும் என்று மத்திய தொழில், வர்த்தக, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிக்கு இப்போது தீர்வை இல்லை என்று குறிப்பிட்ட அவர், விரைவில், ஐரோப்பா, கனடா, பிரி்ட்டன், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) நாடுகளும் இந்திய ஜவுளி ஏற்றுமதிக்கு தீர்வை இல்லை என்பதை வரவேற்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புதுதில்லியில் இன்று ‘இந்திய ஜவுளித் தொழில்துறை – பருத்தி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி சங்க கூட்டமைப்பின்’ பொன்விழா நிகழ்ச்சியில் திரு கோயல், முக்கிய உரை நிகழ்த்தினார். இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்திய ஜவுளித்தொழில், 2030-க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி என்பதை எட்டும் திறனைக் கொண்டுள்ளது என்றும் திரு கோயல் கூறினார். சுமார் 90 ஆயிரம் பருத்தி விவசாயிகளை நேரடியாக ஈடுபடுத்தும் சூழலை உருவாக்குவதை நோக்கிய பணிக்காக ‘இந்திய ஜவுளித் தொழில்துறை – பருத்தி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி சங்க கூட்டமைப்பை அவர் பாராட்டினார். ஜவுளித்துறையில் தற்சார்பு இந்தியாவை எட்டுவதன் அவசியம் பற்றிப் பேசிய அமைச்சர், நமது ஜவுளிகள் தரம், நம்பகத்தன்மை, புதிய கண்டுபிடிப்பு, ஆகியவற்றின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஜவுளித்துறையில், நிலம் - நூலிழை – தொழிற்சாலை – ஆடை – வெளிநாடு என்ற மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்கை எட்டுவதற்கு தேசம் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
உலகளாவிய பருத்தித் தொழிற்சாலையில், இந்திய ஜவுளிகளின் பழைய ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு ஜவுளித்துறைக்கும், ஆடைகள் வடிவமைப்புத்துறைக்கும் முழு உதவியை வழங்கும் என்று திரு கோயல் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815956
***************
(Release ID: 1816120)
Visitor Counter : 180