பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையிலான ஒற்றைச்சாளர இணையதளம் அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

Posted On: 12 APR 2022 4:26PM by PIB Chennai

ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையிலான ஒற்றைச்சாளர இணையதளம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப் பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அறிவித்துள்ளார். இந்த இணைய தளம் நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது சங்கங்களுடன் தொடர்புகொள்வதுடன், அவர்களது கருத்துக்கள், ஆலோசனைகள், குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து அவற்றுக்கு உரிய தீர்வு காண வகை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

பென்ஷன் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான தன்னார்வ முகமைகளின் 32-வது நிலைக்குழு கூட்டத்தில்  உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2014-ம் ஆண்டு முதல், ஓய்வூதிய விதிமுறைகளில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஓய்வூதியதாரர்கள் குறைகளை தெரிவித்து அதற்கு தீர்வுகாண பல்வேறு அதிகாரிகளை அணுக வேண்டிய அவசியம் இல்லாமல், அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த ஒற்றைச்சாளர இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.  அனைத்து அமைச்சகங்களும் இந்த தளத்துடன் இணைத்துக் கொண்டு  செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஓய்வூதியதாரர்கள் தங்களது சங்கங்கள் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களை தொடர்பு கொள்வதற்கு தன்னார்வ முகமைகளின் நிலைக்குழு கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, சண்டிகர், ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் இதரப்பகுதிகளைச் சேர்ந்த  ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 இன்றைய கூட்டத்தில் மத்திய அரசு சுகாதார திட்ட நலவாழ்வு மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை, ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வீடு தேடி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம் 2020 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து இந்தியா அஞ்சலக வங்கிகள் மூலம்  3,08,625 ஆயுள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.  ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் மூலம் ஆயுள் சான்றிதழ் அளிக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்.

இதுவரை ஆறு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைப்பெற்றுள்ளன. அடுத்த குறைதீர்க்கும் முகாம் 5.5.2022 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816031

***************



(Release ID: 1816093) Visitor Counter : 275