பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

ஆறு மாநிலங்களின் மண்டல மாநாடு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தலைமையில் நாளை மும்பையில் நடைபெறவுள்ளது

Posted On: 11 APR 2022 9:54AM by PIB Chennai

மும்பையில் நாளை (ஏப்ரல் 12, 2022) நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மேற்கு மண்டல மாநாட்டிற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி நாளை தலைமை வகிப்பார்.

அண்மையில் தொடங்கப்பட்ட 3 முக்கிய திட்டங்களான ஊட்டச்சத்து 2.0, வாத்சல்யா, சக்தி ஆகியவற்றின் சிறந்த தாக்கத்தை உறுதி செய்வதற்காக, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான மண்டல ஆலோசனைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.

மும்பையில் நடைபெறும் மண்டல கூட்டம் இத்தொடரின் நான்காவது கூட்டமாகும். முதல் கூட்டம் ஏப்ரல் 2-ம் தேதி சண்டிகரிலும், இரண்டாவது ஏப்ரல் 4-ம் தேதி பெங்களூருவிலும் மூன்றாவது கூட்டம் ஏப்ரல் 10 அன்று குவஹாத்தியிலும் நடைபெற்றது.

இந்தியாவின் மக்கள்தொகையில் 67.7% இருக்கும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பான சூழலில் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்வது நாட்டின் நிலையான மற்றும் சமமான வளர்ச்சிக்கும், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை அடைவதற்கும் முக்கியமானது.

இந்த நோக்கத்தை அடைய, அமைச்சகத்தின் 3 முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. 2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதி ஆணையக் காலத்தில் இந்த 3 பணிகளும் செயல்படுத்தப்படும்.

செலவு பகிர்வு அடிப்படையில் மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களால் செயல்படுத்தப்படும் மத்திய நிதியுதவி திட்டங்கள் இவையாகும். திட்ட வழிகாட்டுதல்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் பகிரப்படுகின்றன.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மாநில நடவடிக்கைகளில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வது, பாலின சமத்துவம் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட சட்டம், கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது, அமைச்சகங்கள் இடையேயான மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது ஆகியவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.

சமூக மாற்றத்தை உறுதி செய்வதற்காக கூட்டாட்சியின் உண்மையான உணர்வில் அடுத்த 5 ஆண்டுகளில் திட்டங்களை முறையாக செயல்படுத்த வசதியாக அமைச்சகத்தின் 3 முக்கிய திட்டங்கள் குறித்து மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மண்டல மாநாடுகளின் நோக்கம் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815517

******



(Release ID: 1815608) Visitor Counter : 181