உலக ஹோமியோபதி தினத்தையொட்டி 2022 ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் ஆயுஷ் அமைச்சகம் இரண்டு நாள் அறிவியல் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம், தேசிய ஹோமியோபதி கல்விக்கழகம், ஆகிய 3 அமைப்புகளுடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது. புதுதில்லியில் உள்ள பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் கலையரங்கில் இந்த மாநாடு நடைபெறும். ஹோமியோபதியின் நிறுவனர் டாக்டர் கிறிஸ்டியன் ஃப்ரடரிக் சாமுவேல் ஹானிமேன் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அவரது 267-வது பிறந்த நாளில் உலக ஹோமியோபதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘ஹோமியோபதி: நல்வாழ்வுக்கு மக்களின் தேர்வு’ என்பது இந்த அறிவியல் மாநாட்டின் மையப்பொருளாகும்.
இந்த அறிவியல் மாநாட்டை ஏப்ரல் 9 அன்று மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஆயுஷ் மற்றும் மகளிர், குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர பாய் முஞ்பாரா ஆகியோர் தொடங்கிவைப்பார்கள். ஹோமியோபதி ஆய்வாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹோமியோபதி மருத்துவர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு ஹோமியோபதி சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
ஹோமியோபதி துறையில் இதுவரை கடந்த வந்த பாதையையும், சாதனைகளையும் ஆய்வு செய்யும் வாய்ப்பாக இந்த மாநாடு அமையும். அத்துடன் ஹோமியோபதி வளர்ச்சிக்கான எதிர்கால உத்திகள் வகுத்தலும் இதன் நோக்கமாகும்.
ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதும், பொதுமக்கள் இதனை ஏற்கச் செய்வதும் இந்த அறிவியல் மாநாட்டின் நோக்கங்களாகும். மேலும், மக்களின் நல்வாழ்வுக்கான முதல் தேர்வாக ஹோமியோபதியை முன்னேற்றுவதற்குத் தேவையான கருத்துக்களும், இதில் விவாதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814734
*******