குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஆசிய நாடுகளுடன் தொடர்பு கொள்வது இந்தியாவுக்கு முக்கிய முன்னுரிமையாக உள்ளது; குடியரசு தலைவர்

Posted On: 03 APR 2022 5:18PM by PIB Chennai

மத்திய ஆசிய நாடுகளுடன் தொடர்பு கொள்வது இந்தியாவுக்கு முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்று  குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் சர்வதேச உறவுகள் நிறுவனத்தின் இளம் ராஜீய அதிகாரிகள் இடையே உரையாற்றிய அவர், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் மற்றும் அஷ்காபாத் ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா உறுப்பு நாடாக உள்ளதை சுட்டிக்காட்டினார். மத்திய ஆசிய நாடுகளுக்கு தடங்கல் இல்லாத, பாதுகாப்பான கடல் வழித்தடமாக இருக்கும் ஈரானின் சாபஹார் துறைமுகத்தை இயக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடுகளுக்கு இடையே, இணைப்பு முன்முயற்சிகளை எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல, அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதும் அவசியமாகும் என அவர் கூறினார். இந்தப் பிராந்தியத்தில் முதலீடு செய்து, தொடர்புகளைக் கட்டமைத்து ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை, சுதந்திரமடைந்ததில் இருந்து தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது என குடியரசு தலைவர் கூறினார். உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகள், அதனை மேலும் வலுப்படுத்த விரும்புகின்றன.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மிக முக்கியமானது, முதலில் அண்டை நாடு என்பதாகும் என குடியரசு தலைவர் குறிப்பிட்டார். எங்களது வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டின் பயன் அண்டைநாடுகளுக்கும் கிடைக்கிறது. தொடர்பு, வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவின் இந்தோ –பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு பல நாடுகளுக்கும் பாலமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை கடந்த சில ஆண்டுகளாக மத்திய ஆசிய நாடுகளுடன் வரலாற்று பூர்வமான நமது நல்லுறவுகளுடன் புத்துயிர் பெற்றுள்ளதாக குடியரசு தலைவர் கூறினார்.  வளரும் நாடுகளான, இந்தியாவும், மத்திய ஆசிய நாடுகளும் தங்களது பொதுவான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. பயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம், போதைமருந்து கடத்தல் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

உக்ரைன் போர் பற்றி  குறிப்பிட்ட குடியரசு தலைவர், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை உறுதியானது என்று கூறினார். மனிதநேய நிலை மோசமடைந்து வருவது குறித்து கவலை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். போர் நிறுத்தம் மேற்கொண்டு, பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், உக்ரைனுக்கு மனிதநேய உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசு தலைவர், சமகால பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஐநா பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட வேண்டும் என்பதிலும், இந்தியாவின் உறுப்பினர் அந்தஸ்துக்கு துர்க்மெனிஸ்தான் ஆதரவு அளித்து வருவது குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்ட அவர், அந்நாட்டின் நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, குடியரசு தலைவர் அஷ்காபாத்தில் மக்கள் நினைவு வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பக்தியார்லிக் விளையாட்டு வளாகத்திற்கும் சென்ற அவர், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அங்கு இந்திய பயிற்சியாளரின் மேற்பார்வையில் நடைபெற்ற யோகா செயல்விளக்கத்தையும் அவர் பார்வையிட்டார்.

குடியரசு தலைவர் தமது அடுத்த கட்ட பயணமாக நாளை நெதர்லாந்து செல்கிறார்.

***************


(Release ID: 1813000) Visitor Counter : 266