வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: மக்கள் மற்றும் தொழில்களுக்கிடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்கும்

Posted On: 02 APR 2022 1:46PM by PIB Chennai

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (இந்த்ஆஸ் எக்டா) மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் திரு டான் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் மேன்மைமிகு ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பிறகு வளர்ந்த நாடு ஒன்றுடனான இந்தியாவின் முதல் வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆகும். இரு நட்பு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு பொருளாதார மற்றும் வணிக உறவுகளின் முழு அளவிலான ஒத்துழைப்பை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம், பொருட்களின் வர்த்தகம், ஆதார விதிகள், சேவைகள் வர்த்தகம், வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப எல்லைகள், சுகாதாரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். தகராறு தீர்வு, தொலைத்தொடர்பு, சுங்க நடைமுறைகள், மருந்து பொருட்கள் மற்றும் பிற பகுதிகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவையும் இதில் அடங்கும். இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 8 வெவ்வேறு துறை சார்ந்த கடிதங்களும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நிறைவு செய்யப்பட்டன.

 

தாக்கம் அல்லது நன்மைகள்:

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான அமைப்புரீதியான செயல்முறையை ஒப்பந்தம் வழங்குகிறது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவால் கையாளப்படும் அனைத்து கட்டண வரிகளையும் உள்ளடக்கியது ஆகும். ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ஜவுளி, தோல், காலணி, தளவாடங்கள், உணவு மற்றும் விவசாயப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் இதில் அடங்கும். மறுபுறம், தனது 70%-க்கும் மேற்பட்ட கட்டண வரிகளில் ஆஸ்திரேலியாவிற்கு முன்னுரிமை அணுகலை இந்தியா வழங்கும்.

சேவைகள் வர்த்தகத்தைப் பொறுத்தவரை, சுமார் 135 துணைத் துறைகள் பெரியளவிலான உறுதிகளை வழங்கியுள்ள ஆஸ்திரேலியா,  120 துணைத் துறைகள் மிகவும் விருப்பமான நாடு எனும் தகுதியையும் வழங்கியுள்ளது. இந்தியாவின் முக்கியத் துறைகளான தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், வணிக சேவைகள், உடல்நலம், கல்வி மற்றும் ஒலி-ஒளி உள்ளிட்டவை இதில் அடங்கும்.

 

காலக்கெடு:

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் 30 செப்டம்பர் 2021 அன்று முறையாக மீண்டும் தொடங்கப்பட்டு, மார்ச் 2022 இறுதிக்குள் விரைவாக முடிவடைந்தன.

 

பின்னணி:

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சிறந்த இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் அவை வலுப்பெற்று நேர்மறையான பாதையில், நட்புரீதியான கூட்டாக வளர்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812730

***************(Release ID: 1812774) Visitor Counter : 371