பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் 5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் ‘புது மனைப் புகுவிழா’-வில் பிரதமர் பங்கேற்றார்

“நேர்மையான அரசின் முயற்சிகளும், அதிகாரம் அளிக்கப்பட்ட ஏழைகளின் முயற்சியும் ஒன்றுபட்டால் வறுமை ஒழியும்”

“ஏழைகளுக்கு கல் வீடுகள் கட்டி வழங்கும் இயக்கம் அரசுத் திட்டம் மட்டுமல்ல கிராமப்புற ஏழைகளிடம் நம்பிக்கையை உருவாக்குவதும் ஆகும்”

“திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் போது பாகுபாட்டையும் ஊழலையும் அரசு ஒழிக்கிறது”

“ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்தக் குளங்களை அமைக்கும் பணியில் மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் பஞ்சாயத்துகளும் ஈடுபடவேண்டும்”

Posted On: 29 MAR 2022 2:00PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் 5.21 லட்சம் பயனாளிகளின் ‘புது மனைப் புகுவிழா’-வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவ்ஹான், மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வரவிருக்கும் விக்ரம் சம்வாத் புத்தாண்டில் புதுமனைப் புகுவிழா நடத்தும் பயனாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே இருந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு வாய்ப்புகள் இருந்தபோதும் ஏழை மக்களுக்கு போதுமான வசதிகளை செய்யவில்லை. “ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால் வறுமையை எதிர்த்து போரிடும் துணிவை அவர்கள் பெறுவார்கள். நேர்மையான அரசின் முயற்சிகளும், அதிகாரம் அளிக்கப்பட்ட ஏழைகளின் முயற்சியும் ஒன்றுபட்டால் வறுமை ஒழியும்” என்று அவர் கூறினார்.

“பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிராமங்களில் 5.25 லட்சம் வீடுகள் கட்டப்பட்டிருப்பது வெறும் புள்ளி விவரத்திற்காக அல்ல. இந்த 5.25 லட்சம் வீடுகள் நாட்டிலுள்ள ஏழைகள் பலம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாகும்” என்று பிரதமர் வலியுறுத்திக் கூறினார். ஏழைகளுக்கு கல் வீடுகள் கட்டி வழங்கும் இயக்கம் அரசுத் திட்டம் மட்டுமல்ல கிராமப்புற ஏழைகளிடம் நம்பிக்கையை உருவாக்குவதுமாகும் என்று திரு மோடி மேலும் கூறினார். “ஏழைகளை வறுமையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கான முதல் கட்ட நடவடிக்கை” என்று அவர் குறிப்பிட்டார். “இந்த வீடுகள் சேவை உணர்வைப் பிரதிபலிப்பதோடு கிராமங்களின் லட்சாதிபதி பெண்களை உருவாக்குவதற்கான இயக்கமும் ஆகும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஏற்கனவே சில லட்சம் வீடுகள் கட்டப்பட்டதற்கு மாறாக தற்போதுள்ள அரசு ஏற்கனவே 2.5 கோடிக்கும் அதிகமான கல் வீடுகளை உரியவர்களுக்கு ஒப்படைத்துள்ளது என்றும் இவற்றில் 2 கோடி வீடுகள் கிராமப்புறத்தில் உள்ளவை என்றும் பிரதமர் கூறினார். பெருந்தொற்று காலத்திலும்கூட இந்த இயக்கத்தை மந்தமாக்க முடியவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேசத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 30 லட்சம் வீடுகளில் 24 லட்சம் வீடுகள் ஏற்கனவே முழுமை பெற்று பைகா, சஹாரியா, பாரிய சமாச் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள், கழிப்பறை, சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்னிணைப்பு, உஜாலா திட்டத்தின் கீழ் எல்இடி விளக்குகள், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு, வீடுதோறும் தண்ணீர் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதனால் இந்த வசதிகளுக்காக பயனாளிகள், தேடி அலையும் தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் ஏறத்தாழ இரண்டு கோடி வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார். இந்த உரிமை என்பது வீட்டில் நிதி சார்ந்து முடிவெடுப்பதில் பெண்களின் பங்கேற்பை வலுப்படுத்துகிறது. பெண்களின் கௌரவம் மற்றும் வாழ்க்கையை எளிதாக்குவதை விரிவுபடுத்தும் அரசின் கோட்பாட்டை வலியுறுத்திய பிரதமர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 6 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீருக்காக குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஏழைகளுக்கு விலையில்லாமல் ரேஷன் வழங்க அரசு 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதால் கூடுதலாக 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். சரியான பயனாளிகள் முழுமையாக பயனைடைய வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாடு காரணமாக போலியான 4 கோடி பயனாளிகளை பதிவேட்டிலிருந்து அரசு நீக்கியுள்ளது. 2014-ற்குப்பின் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் ஏழைகள் தங்களுக்குரிய பயனைப் பெற்றனர் மேலும் நேர்மையற்ற நபர்களால் அபகரிக்கப்பட்ட பணமும் சேமிக்கப்பட்டது. அமிர்த காலத்தில் அனைத்துப் பயனாளிகளுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் போது பாகுபாட்டையும் ஊழலையும் அரசு ஒழிக்கிறது என்று அவர் கூறினார்.

சம்விதா திட்டத்தின்கீழ் சொத்து ஆவணம் முறைப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் கிராமங்களில் வணிகச் சூழலை அரசு எளிதாக்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 50 ஆயிரம் கிராமங்கள் அளவெடுக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக கிராமப்புற பொருளாதாரம் வேளாண்மைக்கு உட்பட்டிருந்தது என்று பிரதமர் கூறினார். ட்ரோன்கள் போன்ற நவீன தொழில்நுட்பத்தையும் இயற்கை வேளாண்மை போன்ற பழைய முறைகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலம் கிராமங்களில் புதிய வழிமுறைகளை அரசு திறந்துவிட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதை புதிய சாதனைகளை உருவாக்கியதற்காக மத்தியப் பிரதேச அரசையும் முதலமைச்சரையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதித் திட்டத்தின்கீழ் மத்தியப் பிரதேச விவசாயிகள் 13,000 கோடியைப் பெற்றுள்ளனர்.

வரவிருக்கும் புத்தாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் 75 அமிர்தக் குளங்களை அமைக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்தக் குளங்கள் புதிதாகவும் பெரிதாகவும் இருக்கவேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி இதற்குப் பயன்படுத்தப்படும் என்று கூறிய அவர் இது நிலம், இயற்கை, சிறு விவசாயிகள், பெண்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகளுக்கும்கூட பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்றார். இந்த திசையில் அனைத்து மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் ஊராட்சிகளும் பணியாற்ற அவர் வேண்டுகோள் விடுத்தார். 

***************



(Release ID: 1811026) Visitor Counter : 175