குடியரசுத் தலைவர் செயலகம்
ஹரித்துவாரில் திவ்ய பிரேம் சேவா மிஷனின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Posted On:
27 MAR 2022 4:03PM by PIB Chennai
ஹரித்துவாரில் நடைபெற்ற திவ்ய பிரேம் சேவா மிஷனின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், தொடங்கப்பட்டதில் இருந்து மனித குலத்துக்கு தொண்டாற்றி வரும் திவ்ய பிரேம் சேவா மிஷனின் பங்களிப்பைப் பாராட்டி, அதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதற்காக மகிழ்ச்சி தெரிவித்தார். மனிதகுலத்துக்கு சேவை புரிவதே, ஆன்மீகத்தின் அடிப்படை என்ற பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவதைப் பாராட்டினார்.
ஹரித்துவாரில் குடிசையில் தொழுநோயாளிகளுக்கு மருத்துவ சேவை தொடங்கப்பட்டதை தாம் கண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். இந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஆசிஷ் கவுதமைப் பாராட்டிய அவர், இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரயாக்ராஜைச் சேர்ந்த இளைஞர், ஹரித்துவாருக்கு வந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கி சமூகத்தின் பாரம்பரியத்துக்கு மாறாக தொண்டாற்றியிருப்பது அவ்வளவு எளிதானதல்ல என்று அவர் கூறினார். ஆனால், அவரது உறுதிப்பாடு காரணமாக அவர் எடுத்துக்காட்டாக விளங்கினார் என்றார் .
தொழுநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை, நோயாளிகளின் குழந்தைகளுக்குப் பள்ளிகள், விடுதிகள், குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு விடுதிகள், திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை ஏற்படுத்தி நடத்தி வந்த திவ்ய பிரேம் சேவா மிஷனின் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை குடியரசு தலைவர் குறிப்பிட்டார்.
தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே எனக்கூறிய குடியரசுத் தலைவர், சுதந்திரத்துக்குப் பின்னர், தீண்டாமை தண்டனைக்குரிய குற்றம் என அரசியல் சாசனம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தீண்டாமை பல நூற்றாண்டுகளாக இருந்து வந்ததை அவர் குறிப்பிட்டார். இன்றும் அந்தத் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். இந்த நோய் பற்றி இன்றும் பல குழப்பமான சந்தேகங்கள் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவரும், மற்ற நோயால் பீடிக்கப்பட்டுள்ளவர்களைப் போல, ஒரு குடும்பத்தின், சமூகத்தின் அங்கம் என்பதை அனைவரும் உணரவேண்டும் எனக் குடியரசு தலைவர் வலியுறுத்தினார்.
தொழுநோயாளிகளுக்கு மனரீதியில் சிகிச்சை அளிக்க வேண்டியதை வலியுறுத்திய குடியரசு தலைவர், இதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
மனித சேவைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மகாத்மா காந்தி, தொழுநோயாளிகளுக்கு தொண்டாற்றியதைக் குடியரசுத் தலைவர் நினைவுகூர்ந்தார். மனிதகுலத்துக்கு தொண்டாற்றுவதே சிறந்த சேவை எனக் காந்தியடிகள் கருதினார். காலரா, பிளேக் போன்ற நோய்களைப்போல, தொழுநோயும் குணப்படுத்தக்கூடியதுதான் என அவர் நம்பினார். நோயாளிகளை இழிவாக எண்ணுபவர்கள்தான் நோயாளிகள் என்ற காந்தியடிகளின் கருத்து இன்றைக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது.
தொழுநோய்க்கு எதிராக மக்களிடையே நிலவும் குழப்பங்களுக்கு நமது நாட்டின் இளைஞர்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார். நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகளின் மூலமாக, நோய்க்கான சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை பரப்புமாறு அவர் வலியுறுத்தினார்.
***************
(Release ID: 1810259)
Visitor Counter : 219